பிரிட்டன் நாட்டில் ஹிந்து கோவில் ஒன்றில் இருந்த காவி கொடியை ஒருவர் அகற்ற முயற்சிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரிட்டன் நாட்டின் லீசெஸ்டர்ஷையரில் இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இப்போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஒரு ஹிந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கருப்பு உடை அணிந்த ஒரு நபர், ஹிந்து கோவில் கட்டடத்தின் மேல் ஏறி காவி கொடியை அகற்ற முற்படுகிறார். இதனை கீழே நிற்கும் சிலர் ஆரவாரமிட்டபடி வரவேற்றனர். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக லீசெஸ்டர்ஷைர் போலீசார் விசாரணையைத் துவங்கி உள்ளனர். கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு, அப்பகுதியில் ஹிந்து மற்றும் முஸ்லிம் குழுக்களுக்கு இடையே வகுப்புவாத பதற்றம் வன்முறையாக வெடித்தது. இதுவரை, 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.