சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அதிகமாக மது குடித்ததால் விமானத்தில் இருந்து இறக்கவிடப்பட்டதாக வெளியான தகவல் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பாதல் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அதிகமாக மது குடித்துவிட்டு விமானத்தில் ஏறியதால், அவர் இறக்கிவிடப்பட்டதாக செய்தி வெளியாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா விமானத்தில் பகவந்த் மான் பயணிக்க இருந்ததால், அவருக்காக விமானம் 4 மணி நேரம் காத்திருந்ததாகவும், பின்னர் தள்ளாடியபடி அவர் விமானத்தில் ஏறியதாகவும், இது விமானத்தின் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என்பதால், அவர் இறக்கவிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சுக்பிர் சிங் பாதல், இது குறித்து பாதிக்கப்பட்ட சக பயணிகள் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இதனால், பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டை தவறவிட்டதாகவும் கூறப்படுகிறது என குறிப்பிட்டுள்ள சுக்பிர் சிங் பாதல், பகவந்த் மானின் இந்த நடத்தை, உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்களை தலைகுனிய வைத்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தச் சம்பவம் குறித்து பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகள் வாய் திறக்க மறுப்பதாகத் தெரிவித்துள்ள சுக்பிர் சிங் பாதல், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும், இந்த இவகாரம் குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்றும், முதல்வர் இறக்கவிடப்பட்டது உண்மையெனில் அது குறித்து ஜெர்மனியிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும் சக்பிர் சிங் பாதல் வலியுறுத்தி உள்ளார்.