சென்னையில் அண்ணா சாலை உட்பட 10 சாலைகள் அகலப்படுத்தப்பட உள்ளன: அமைச்சர் முத்துச்சாமி

சென்னை: சென்னையில் அண்ணாசாலை உட்பட 10 சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளதாக அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மூன்றாம் முழுமைத் திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல் (Master Plan-3) பயிலரங்கம் தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இரண்டாவது முழுமைத் திட்டம் 2026-இல் முடிவடைய உள்ள நிலையில், 2027 முதல் 2046 ஆண்டுக்கான சென்னை மாநகர வளர்ச்சியின் முழுமைத் திட்டம் மற்றும் அதற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

இதில் பேசிய வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, “அரசால் எடுக்கப்படும் தொலைநோக்கி திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்பது மிகவும் முக்கியமான ஒன்று. மூன்றாம் முழுமைத் திட்டம் மூலம் ஆக்கிரமிப்புகளை முழுமையைத் தடுக்க முடியும். சென்னையில் அண்ணாசாலை போன்ற 10 முக்கிய சாலைகள் அகலப்படுத்துவதற்க்கான பணிகள் நடைபெறவுள்ளது. நில ஆக்கிரமிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மூன்றாம் முழுமைத் திட்டம் அமையும்.

எதிர்காலத்தில் சென்னை மாநகராட்சியில் செய்யப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அரசிடம் நேரடியாகவே கருத்துகளை தெரிவிக்கலாம். திட்டமிடாத காரணத்தினாலேயே நகரங்களில் சாலை நெரிசல்கள் ஏற்ப்படுகிறது. மூன்றாம் முழுமைத் திட்டம் மூலம் போக்குவரத்து நெரிசலை தடுக்க முடியும்.

பொதுமக்களுக்கு பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கான ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயன்பெறக்கூடிய திட்டங்களை தற்போது மூன்றாம் முழுமைத் திட்டம் மூலம் துவங்கப்படவுள்ளது. மழை நீர் தேங்குவதை முழுமையாக தடுக்கும் வகையில் தொலைநோக்கு திட்டங்கள் சென்னையில் செயல்படுத்தி வருகிறோம்” என்று அமைச்சர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.