சவுக்கு சங்கர்… யூடியூப் பிரியர்களான இன்றைய யூத்களின் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர். பெயருக்கு ஏற்றாற்போல், பல்வேறு சமூக அவலங்களுக்கு தமது பேட்டிகளின் மூலம் சவுக்கடி கொடுத்து வருபவர். ஊடகங்களில் வெளிப்படுத்தும் பொட்டில் அடித்தாற் போன்ற தமது ஆணித்தரமான கருத்துக்களால் சமூகத்தின் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் தமக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.
இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரரான சவுக்கு சங்கர், பிரபல யூடியூப சேனல் ஒன்றுக்கு அண்மயில் அளித்திருந்த பேட்டியே அவருக்கு வினையாக மாறிவிட்டது.
கடந்த ஜூலை 22 ஆம் தேதி அளித்த அந்த பேட்டியில் ‘ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது’ என்று சவுக்கு சங்கர் பகிரங்மாக கூறிவே, உடனே அவர் மீது நீதிமன்ற அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணை இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்து கடந்த 15 ஆம் தேதி (செப்.15) அதிரடியாக உத்தரவிட்டிருந்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.
சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, நாம் தமிழர் கட்சித் தவைவர் சீமான், ‘தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது’ என்று அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஆடிட்டரும், வலதுசாரி சிந்தனையாளராகவும் அறியப்படும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கடந்த ஆண்டு துக்ளக் இதழின் 51 ஆவது ஆண்டு விழாவில் நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அவரது இந்த பேச்சை சுட்டிக்காட்டி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ள நீதிமன்றம். இவ்வாறு நீதிபதிகள் நியமனம் குறித்தும், அவர்களின் தகுதி குறித்தும் விமர்சித்து மிகவும் மோசமாக பேசியுள்ள குருமூர்த்தியை சிறைக்கு அனுப்புமா? என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சில ஆண்டுகளுக்கு முன் ஐகோர்ட் குறித்து மிகவும் மோசமாக பேசியிருந்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீதான அவதூறு வழக்கு ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ளது ஏன்? இதுநாள்வரை அவருக்கு தண்டனை விதிக்கப்படாதது ஏன்? நீதிமன்றத்தை அவதூறாக பேசிவிட்டு பிறகு மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகிடுமா? சவுக்கு சங்கருக்கு ஒரு நியாயம், ஹெச். ராஜாவுக்கு ஒரு நியாயமா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வழக்கின் பின்னணி:
2018 செப்டம்பப் 15 ஆம் புதுக்கோட்டை அருகே திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பங்கேற்றிருந்த நிலையில், ஊர்வலத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் குறித்து ராஜாவிடம் போலீசார் எடுத்துரைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், ஐகோர்ட் ஆவது… ஆவது என தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருந்தார். அத்துடன் போலீசாரை லஞ்ச பேர்வழிகள் என்றும் அவர் கூறிவே, போலீசாருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது. சமூக வலைதளங்களில் ஹெச்.ராஜாவை விமர்சிப்பவர்கள் இன்றளவும் கூட இந்த வீடியோவை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதனால் வேறுவழியின்றி ஹெச். ராஜா நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். அத்துடன் அந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்று ஹெச்.ராஜா தரப்பு எண்ணியிருந்த நிலையில் வழக்கறிஞர் துரைசாமி என்பவர் ஹெச் ராஜா பேசிய விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தமது மனுவில், சென்னை உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியது தொடர்பாக ஹெச். ராஜா உள்ளிட்டோர் மீது திருமயம் காவல் நிலையத்தில் பவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை; வழக்கு விசாரணையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, வழக்கை துரிதமாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
கிட்டதட்ட மூன்றாண்டுகளுக்கு முன், 2020 ஜனவரியில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இந்த வழக்கில் ஏன் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லையென கேள்வியெழுப்பிய நீதிமன்றம், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இதுநாள்வரை இந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவே தெரிகிறது. அதேசமயம், சவுக்கு சங்கர் மீதான அவதூறு இரண்டே மாதத்தில் விசாரணை முடிந்து அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.