ஜெய்ப்பூர்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இருந்த குறைப்பாட்டை அந்நிறுவனத்திற்கு தெரிவித்த காரணத்தால் ரூ.38 லட்சத்தை சன்மானமாக பெற்றுள்ளார் இந்திய மாணவர் ஒருவர். இது அமெரிக்காவின் மெட்டா தளங்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சங்க காலத்தில் புலவர்கள் தங்கள் திறனை கொண்டு பாடல் எழுதி, அதனை கொடையுள்ளம் படைத்த மன்னர்களிடம் காட்டி பரிசல் பெற்று செல்வார்கள் என பாடப்புத்தகங்களில் படித்துள்ளோம். இதுவோ டிஜிட்டல் காலம். அனைத்தும் இணைய மயமாகிவிட்ட சூழலில் பெரும்பாலான மக்கள் அதிகம் உலாவும் தளங்களில் உள்ள சிறு சிறு குறைபாடுகளை தங்களது தொழில்நுட்ப மூளையின் திறன் மூலம் கண்டுபிடித்து, அதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் கிடைக்கிறது.
அந்தப் பட்டியலில் புதியவராக இணைந்துள்ளார் ஜெய்ப்பூரை சேர்ந்த சர்மா என்ற மாணவர். ஒரு ரீலின் தம்ப்னைலை பாஸ்வேர்டு இல்லாமல் வெறும் ஐடியை மட்டும் கொண்டு மாற்ற முடியும் என்பதை அவர் கண்டுள்ளார். இதனை ஒன்றுக்கு இரண்டு முறை சோதித்துப் பார்த்துவிட்டு இன்ஸ்டா வசம் அதனைப் பகிர்ந்துள்ளார். மூன்று நாட்களுக்கு பிறகு அதன் டெமோ வீடியோவை பகிரச் சொல்லி இன்ஸ்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை நன்றாக சோதித்த பின்னர் தங்கள் தளத்தில் குறைபாடு இருப்பதை அறிந்து கொண்டுள்ளது இன்ஸ்டா.
இதனை கடந்த மே மாதம் அடையாளம் கண்டுள்ளது இன்ஸ்டா. அப்போது அவருக்கு 38 லட்ச ரூபாய் சன்மானமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அதனை அறிவிக்க நான்கு மாத காலம் தாமதமாகியுள்ளது. அதனால் 4 மாத தாமதத்திற்கு கூடுதலாக 3.6 லட்ச ரூபாயும் சேர்த்து ஒதுக்கீடு செய்துள்ளது மெட்டா.
பயனர்களின் பாதுகாப்பு, ரிஸ்க் போன்றவற்றை கருத்தில் கொண்டு மூன்றாம் நபர்கள் சுட்டிக்காட்டும் குறைகளுக்கு டெக் நிறுவனங்கள் சன்மானம் வழங்குகின்றன. சர்மாவின் முயற்சியினால் மில்லியன் கணக்கிலான இன்ஸ்டா கணக்குகள் ஹேக் செய்யப்படுவதில் இருந்து தப்பியுள்ளதாக தெரிகிறது. அதனால் அவருக்கு லட்சங்களில் சன்மானம் அறிவித்துள்ளது மெட்டா.