பஞ்சாப்: பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய நிலையில், தற்போது அவர் தனது கட்சியோடு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார்.
பஞ்சாபில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்தவர் கேப்டன் அம்ரிந்தர் சிங். அப்போது அவருக்கு நவ்ஜோத் சிங் சித்துவுடன் மோதல் ஏற்பட்டது.
இவரிடம் இருந்த காங்கிரஸ் மாநில தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனை அடுத்து நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் மாநில தலைவராக பதவியேற்றார்.
பதவி விலகல்
இதனால் காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த அம்ரீந்தர் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மீதே கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதனை தொடர்ந்து பதவிக்காலம் முடியும் முன்னரே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் அம்ரிந்தர் சிங்.
புதிய கட்சி
அவரை தொடர்ந்து சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் மாநில முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். கட்சியிலிருந்து வெளியேறிய அம்ரிந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியை தொடங்கினார். இந்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் அம்ரிந்தர் சிங்கின் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
தேர்தல் படுதோல்வி
ஆனால் ஒரு இடத்தில் கூட அம்ரிந்தர் சிங்கின் கட்சி வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து அவர் பாஜக தலைவர்களை சந்தித்து வந்த நிலையில், விரைவில் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தன்னுடைய பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியுடன் சேர்த்து பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் அம்ரீந்தர் சிங்.
பாஜகவில் இணைவு
மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய வேளாண் துறை அமைச்சர் மனோகர் சிங் தோமர், பாஜக பஞ்சாப் மாநில தலைவர் அஷ்வானி சர்மா, பாஜக தலைவர் சுனில் ஜாகர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் அவர் இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அம்ரிந்தர் சிங் பாஜகவில் இணைந்தது முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது.