கால் நூற்றாண்டு கடந்த 5 லார்ஜ் கேப் ஃபண்ட்கள்: வருமானம் எப்படி?

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. இதில் ஆரம்பித்து 25 ஆண்டுகளை கடந்த ஃபண்ட்கள் 50 ஆக உள்ளன. இதில் 5 ஃபண்ட்கள் லார்ஜ் கேப் ஃபண்ட்கள் ஆகும். அவை என்ன வருமானம் கொடுத்திருக்கின்றன எனப் பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட்

லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட்..!

செபி வரையறைபடி, நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பின் (Market Capitalization) அடிப்படையில் 1 முதல் 100 இடங்களில் இருக்கும் நிறுவனங்கள் லார்ஜ் கேப் நிறுவனங்கள் எனப்படும். இந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டம் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட் ஆகும்.

யு.டி.ஐ மாஸ்டர்ஷேர் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி, டாப் 100 ஃபண்ட், ஜே.எம் லார்ஜ் கேப் ஃபண்ட், டாரஸ் லார்ஜ்கேப் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவை அந்த ஃபண்ட் திட்டங்களாகும். இந்த ஐந்து ஃபண்ட்களில் ஒன்று மட்டுமே ஒற்றை இலக்கத்தில் வருமானம் கொடுத்திருக்கிறது. அந்த வருமானமும் சராசரி பணவீக்கமான 7 சதவிகிததை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதர ஃபண்ட்களின் வருமானம் சுமார் 10% தொடங்கி 20 சதவிகிதம் வரைக்கும் உள்ளது. இதில் முதல் இடத்தில்  ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட் 19.50 சதவிகித வருமானத்துடன் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே ஹெச்.டி.எஃப்.சி, டாப் 100 ஃபண்ட் 19% மற்றும் யு.டி.ஐ மாஸ்டர்ஷேர் ஃபண்ட் 17.45% உள்ளன. 

என். விஜயகுமார், இயக்குநர், https://www.click4mf.com/
large cap Fund 25 years

யு.டி.ஐ மாஸ்டர்ஷேர் ஃபண்ட் (UTI Mastershare Fund): லார்ஜ் கேப் ஃபண்ட்களில் மிகவும் பழைய ஃபண்ட் அதாவது இந்தப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஃபண்ட் ஆகும். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 17.45% வருமானம் கொடுத்துள்ளது.   இந்த ஃபண்ட் மொத்தம் 10,570 கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது.

ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட்  (Franklin India Bluechip Fund):  இந்த ஃபண்ட் கடந்த 1993 –ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மொத்தம் ரூ. 6,574 கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 19.50% வருமானம் கொடுத்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி, டாப் 100 ஃபண்ட் (HDFC Top 100 Fund): ஆரம்பத்தில் இந்த ஃபண்டின் பெயர் ஹெச்.டி.எஃப்.சி டாப் 200 ஃபண்ட் என இருந்தது. கடந்த 26 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஃபண்ட் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 19% வருமானம் கொடுத்து வருகிறது. இந்த ஃபண்ட் மூலம் ரூ. 22,306 கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

டாரஸ் லார்ஜ்கேப் ஈக்விட்டி ஃபண்ட் (Taurus Largecap Equity Fund):  இதற்கு முன் இந்த ஃபண்டின் பெயர் டாரஸ் போனன்ஸா ஃபண்ட் என இருந்தது. கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நிர்வகிக்கப்படும் தொகை ரூ.36 கோடியாகும். ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 10.68% வருமானம் கொடுத்துள்ளது.

ஜே.எம் லார்ஜ் கேப் ஃபண்ட் (JM Large Cap Fund): இதற்கு முன் இந்த ஃபண்டின் பெயர் ஜே.எம். ஈக்விட்டி ஃபண்ட் என இருந்தது. கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நிர்வகிக்கப்படும் தொகை ரூ.50 கோடியாகும். ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 8.79% வருமானம் கொடுத்துள்ளது.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு

முதலீடு செய்யலாமா?

மியூச்சுவல் ஃபண்டை பொறுத்த வரையில் கடந்த காலத்தில் கொடுத்த வருமானம் எதிர்காலத்திலும் கொடுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும். நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது உங்களின் நிதி இலக்கு, ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தேர்வு செய்வது நல்லது.

25 வருடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்ட்கள் கிடையாது. இனி வரும் காலங்களில் லார்ஜ் ஃபண்ட்கள் அதிக வருமானம் கொடுக்கும் சூழ்நிலை இல்லை. டைவர்சிஃபைட் ஃபண்ட்கள் (ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்கள், மல்டி கேப் ஃபண்ட்கள்) மிட் கேப் ஃபண்ட்கள், லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்ட்கள்  ஆகியவைதான் அதிக வருமானம் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.