'பணிச்சுமை அதிகரிப்பு.. வருமானம் குறைவு' ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: வார ஊக்கத்தொகையை நிறுத்திவிட்டு புதிய விதிகளை சுவிகி நிறுவனம் அறிமுகப்படுத்தியதால், இன்று காலை முதல் சுவிகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்விகி நிறுவனத்தில்  பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது சுவிகி நிறுவனம் கொண்டு வந்த புதிய நடைமுறையில் புதிய ஊக்கத்தொகைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டு வேலை பார்க்கும் நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த வேலை நேரப்படி 12 மணி நேரம் வேலை பார்த்தால் வாரம் 14500 வரை சம்பளம் கிடைத்த நிலையில், தற்போது 16 மணி நேரம் வேலை பார்த்தாலும் ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டதன் காரணத்தால் 12000 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் கிடைக்க கூடும் என்றும் அதில் பெட்ரோல் செலவு, உணவு செலவு, வாகன செலவு போக 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் கிடைக்கப்படும் எனவும் தெரிவிக்கின்றனர். 

மேலும் புதிய விதிகளின் படி எவ்வளவு வேலை பார்த்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே சம்பளம் வழங்கபட உள்ளதாகவும் ,மேலும் பழைய நடைமுறையின் படி ஊக்க தொகை மற்றும் சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து இன்று காலை முதல் சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருக்கின்றனர். 

சென்னையில் சுவிகி உணவு விநியோகம் செய்யும் பகுதிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட மண்டலங்களில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்த அவர்கள், மீதமுள்ள மண்டலங்களிலும் புதிய சம்பள நடைமுறையை கொண்டு வருவார்கள் எனவும் தெரிவித்தனர். 

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி தங்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாகவும் வருமானம் குறைவதாகவும் வருத்தம் தெரிவித்தனர். முன்பு வழங்கப்பட்டது போலவே வார ஊக்கத் தொகையை வழங்கும் வரை தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.