10 வயதிற்கு மேலான குழந்தைகளின் சருமம் மற்றும் கேசத்திற்கான பராமரிப்புப் பொருள்களை இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
சருமம் மற்றும் கேசதிற்குப் பயன்படுத்தக்கூடிய பொதுவான எண்ணெய், மற்றும் சருமத்திற்குப் பயன்படுத்தக்கூடிய ஸ்கிரப் குளியல் பொடி தயாரிப்பு, மற்றும் பயன்படுத்தும் வழிமுறை இங்கே.
தேவையான பொருள்கள்
1. நல்லெண்ணெய் – தேவையான அளவு
2. தேங்காய் எண்ணெய் – இரண்டு எண்ணெயும் ஒரே அளவு
3. காய்ந்த ரோஜா இதழ்கள்
4. வெட்டிவேர்
5. அகில் சந்தனம்
6. மகிழம் பூ
7. ஆவாரம் பூ
8. துளசி இலை
செய்முறை
* மேற்கூறிய அனைத்துப் பொருள்களையும் வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
* இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு இரண்டு எண்ணெய்களையும் எடுத்துக் கொள்ளவும்.
* இதில், மேற்கூறிய காய்ந்த மூலிகைகளை சிறிதளவு சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளவும்.
* சூடுபடுத்திய பின் அந்த எண்ணெயை அப்படியே மூலிகைகளுடன் சேர்த்து வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டு நாள்களுக்குப் பின் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
* இதனை முகம், உடல், மற்றும் கேசத்தில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து கொள்ளவும். அப்படியே 30 நிமிடங்கள் ஊற விடவும். அதன்பின் ஸ்கிரப்பர் குளியல் பொடி கொண்டு உடலுக்குத் தேய்த்துக் குளிக்க வைக்கவும். தலைக்கு பேபி ஷாம்பூ பயன்படுத்தலாம்.
ஸ்கிரப்பர் குளியல் பொடி செய்யத் தேவையான பொருள்கள்
1. பாசிப்பயறு மாவு
2. அரிசி மாவு
3. கஸ்தூரி மஞ்சள்
4. ரோஜா இதழ் பவுடர்
செய்முறை
* பாசிப்பயறு மாவு இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதில் இரண்டு டீஸ்பூன் அரிசி மாவை சேர்க்கவும்.
* இந்தக் கலவையில் இரு டீஸ்பூன் அளவு ரோஜா இதழ் பவுடர் மற்றும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்துக் கொள்ளவும்
* இவற்றை நன்றாகக் கலந்து, தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலவையை தயார் செய்து எடுத்துக் கொள்ளவும்.
* இந்த குளியல் பொடி கலவையைக் கொண்டு, உடலுக்கு எண்ணெய் தேய்த்த குழந்தையைக் குளிக்கவைக்கவும்.
மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றும்போது குழந்தைகளின் சருமம் மற்றும் கேசம் நன்றாகப் பராமரிக்கப்படும். இதனை பெரியவர்களும் பயன்படுத்தலாம்.