மதுரை: சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து தங்கள் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளதாக மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
இந்தியக் குடியரசு கட்சியின் எம்பியும், மத்திய சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கட்சி பணி நிமர்த்தமாக இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: ”சாதி வாரியாக கணக்கெடுப்பு குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. இக்கணக்கெடுப்பு குறித்து தொழில்நுட்ப ரீதியான பதிவுகளில் சில குழப்பங்கள் உள்ளன. அவற்றை சரி செய்து நிறைவேற்ற வேண்டும். எங்களது இந்தியக் குடியரசு கட்சி சார்பில், நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். இக்கணக்கெடுப்பின் அடிப்படையில் யார், யார் எத்தனை சதவீத மக்கள் உள்ளனர் என தெரிந்துகொள்ளலாம். ஆனால், மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பது தெரியவில்லை.
முதியோர் இல்லம், மனநல காப்பகங்களிலுள்ள குறைபாடுகளை தீர்க்க, முதியோர் இல்லம், மனநல காப்பகம் ஒன்றுக்கு அரசு ரூ.24 லட்சம் முதல் வரை 25 லட்சம் வரை செலவிடுகிறது. 25 நபர்களைக் கொண்ட ஒரு முதியோர் காப்பகத்திற்கு இம்மாதிரி உதவிகள் செய்யப்படுகிறது. மேலும், பதிவு பெறாத என்ஜிஓக்களால் (தொண்டு நிறுவனங்கள்) ஏராளமான தவறு நடக்கிறது. அவற்றை முறைப்படுத்தவேண்டும். பதிவு பெறாத தனியார் அமைப்புகளின் செயல்பாட்டை தடை செய்யவேண்டும். நீட் தேர்வு தேர்ச்சியில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு தகுதியுள்ளோர் தேர்வாகின்றனர்” என்றார்.