ஆலப்புழா: கேரளாவில் இந்திய ஒற்றுமை பயணத்தின்போது புன்னமடா ஏரியில் நடைபெற்ற படகுப்போட்டியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துகொண்டது இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சிநடத்தி வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் நடைப்பயணம் கடந்த செப்.7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.
150 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3800 கி.மீ. பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பு மக்களையும் ராகுல் காந்தி சந்திக்க உள்ளார்.
கேரளாவில் 12வது நாள்
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு கேரள மக்கள் பெரும் ஆதரவை அளித்து வருகின்றனர். வீதியோறும் பொதுமக்கள் சந்திக்கும் ராகுல் காந்தி, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
மக்களை சந்திக்கும் ராகுல்
மக்களின் தேவைகள் என்ன, அவர்களின் கோரிக்கைகள் என்ன என்பதையும் ஆர்வத்துடன் தெரிந்துகொள்கிறார். ராகுல் காந்தியின் நடைபயணத்தை பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் விமர்சனங்களை கடந்து, ராகுல் காந்தியின் பயணம் தொடர்ந்து வருகிறது. இது நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர்.
படகுப்போட்டியில் ராகுல் காந்தி
இன்று காலை 12வது நாள் பயணமானது ஆலப்புழா மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்றது. இதற்கிடையே புன்னமடா ஏரியில் நடைபெற்ற படகு பந்தய கண்காட்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், துடுப்பை கையில் ஏந்தி படகில் களமிறங்கிய ராகுல் காந்தி, துடுப்பு வீசி பந்தயத்தில் பங்கேற்றார்.
இளைஞர்கள் உற்சாகம்
ஒரு பக்கம் ராகுல் காந்தி, இன்னொரு பக்கம் கேசி வேணுகோபால் என்று துடுப்பை பிடித்து படகு போட்டியில் களமிறங்கியதால் இளைஞர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து படகுப் போட்டி முடிந்து கீழே இறங்கிய ராகுல் காந்தியுடன் இளைஞர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். அதேபோல் கேரளாவின் பாரம்பரியமான படகுப் போட்டியில் பங்கேற்றது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.