புதிய மனைப்பிரிவுகளுக்கு சந்தை வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க மாவட்டம் தோறும் குழுக்கள் அமைப்பு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் உருவாக்கப்படும் புதிய மனைப் பிரிவுகளுக்கான சந்தை வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க குழு மற்றும் மேல்முறையீட்டு குழுக்களை மாவட்டம் தோறும் அமைத்து பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில், பதிவுத்துறை தலைவரின் 2014-ம் ஆண்டு சுற்றறிக்கைப்படி, புதிய மனைப் பிரிவுகளுக்கு சந்தை வழிகாட்டி மதிப்பு நிர்ணய நடவடிக்கைகள் அனைத்தையும் மாவட்டப் பதிவாளர் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டதாகவும், மாவட்ட பதிவாளர் நிர்ணயித்த மதிப்பை பதிவுக்கு வருபவர் ஏற்காத பட்சத்தில், துணை பதிவுத்துறை தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம் என்றும், அவ்வாறு நிர்ணயிக்கப்படும் மதிப்பை பதிவுக்கு வருபவர் ஏற்காத நிலையில், இந்திய முத்திரைச் சட்டத்தின்கீழ் பரிந்துரைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூன் 29-ம் தேதி அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மனைப் பிரிவுகளுக்கு மதிப்புநிர்ணயிக்கும் நடைமுறை மாற்றிஅமைக்கப்பட்டு, துணை பதிவுத்துறை தலைவர் தலைமையில் குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மனைப் பிரிவுகளுக்கு மதிப்பு நிர்ணயிக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, பதிவுத்துறை தலைவர் குழு மற்றும் மேல் முறையீட்டுக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் அடங்கிய பரிந்துரையை அரசுக்கு அனுப்பியிருந்தார். இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, தொடர்புடைய மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), சார்பதிவாளர் (வழிகாட்டி) அல்லது சார்பதிவாளர் (நிர்வாகம்) மற்றும் துணை பதிவுத்துறை தலைவரால் நியமிக்கப்படும் தொடர்புடைய மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) இல்லாத அந்த மண்டலத்தில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்டப் பதிவாளர் ஆகியோரை உள்ளடக்கிய மனை மதிப்பு நிர்ணயக் குழு அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், பதிவுத்துறை துணைத் தலைவர், அப்பதிவு மாவட்டத்துடன் தொடர்பில்லாத மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), அப்பதிவு மாவட்டத்துடன் தொடர்பில்லாத மற்றும் மனைமதிப்பு நிர்ணய குழுவில் இடம்பெறாத மாவட்டப் பதிவாளர் ஆகியோரை கொண்ட மனைமதிப்பு நிர்ணய மேல்முறையீட்டுக் குழுவையும் அமைக்க உத்தரவிட்டுள்ளது.

இதில் மனை மதிப்பு நிர்ணயக் குழுவானது, புதிய மனைப்பிரிவுகள் பதிவுக்கு வரும்போது, பதிவு அலுவலர் அவற்றுக்கு மதிப்பு நிர்ணயிக்க வேண்டி மூன்று தினங்களுக்குள் மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன் ஆவண நகல், புல எண்கள், எப்எம்பி மற்றும்கிராம வரைபடம், சுற்றியுள்ள புல எண்கள், வழிகாட்டி மதிப்புஉள்ளிட்ட விவரங்கள், மனைப்பிரிவின் வரைபடம் ஆகியவற்றை அனுப்ப வேண்டும். இவற்றை கொண்டு மனைக்கான சந்தை வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்த மதிப்பு ஏற்கெனவே உள்ள புல எண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்புகளின் உயர்ந்தபட்ச மனைமதிப்புக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

15 நாட்களில் மதிப்பு நிர்ணயம்: பதிவு அலுவலரிடம் இருந்து கருத்துரு வந்த 15 நாட்களுக்குள் மதிப்பு நிர்ணய ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும். மேல்முறையீடு செய்யப்படும் பட்சத்தில், அதற்காக அமைக்கப்படும் குழு சம்பந்தப்பட்ட மனைப்பிரிவை நேரில் பார்வையிட்டு சந்தை மதிப்பு குறித்து விசாரித்து பொருத்தமான மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். மாவட்டம்தோறும் தனித்தனியான மனைமதிப்பு நிர்ணயக்குழு மற்றும் மனைமதிப்பு நிர்ணய மேல்முறையீட்டுக் குழு, பதிவுத்துறை துணைத்தலைவரால் ஏற்படுத்தப்பட வேண்டும். தேவைக்கேற்ப அக்குழுக்கள் பதிவுத்துறை துணைத்தலைவரால் மறு கட்டமைப்பு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.