விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் செயல்பட்டு வருகிறது அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம். திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் உளுந்து, காரமணி, மணிலா, நெல், எள்ளு உள்ளிட்ட தானியங்களை அங்கு விற்பனைக்காக கொண்டு வருவார்கள். அப்படி விவசாயிகள் கொண்டு வரும் தானிய மூட்டைகளை எடை போடுவதற்கு மூட்டைக்கு 20 ரூபாயும், சாக்கு மாற்றுவதற்கு 10 ரூபாயும் என மொத்தம் 30 ரூபாய் லஞ்சம் வாங்கி வந்துள்ளனர் அங்கு பணிபுரியும் ஊழியர்கள். இவ்வாறு லஞ்சம் பெறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி ஒருவர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழியர்கள் 30 ரூபாய் லஞ்சம் கேட்டுப் பெறுவதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். விவசாயிகளிடம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழியர்கள், இவ்வாறு கொள்ளையில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“விவசாயிகளிடம் லஞ்சம் பெறக் கூடாது. அப்படி லஞ்சம் பெற்றால் ஊழியர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் திண்டிவனம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயியிடம் பேசினோம். “இது போல் லஞ்சம் கேட்டு பெறுவது இன்று நேற்று அல்ல, தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. எனக்குத் தெரிந்தே 20 வருடங்களாக நடக்கிறது. விவசாயிகள் எந்த விளைப்பொருளை அங்கு எடுத்துக்கொண்டு போனாலும், ஒரு மூட்டையை எடை போட 20 ரூபாயும், சாக்கு மாற்ற 10 ரூபாயும் அங்கு வேலை செய்யும் ஊழியருக்கு லஞ்சம் கொடுத்தாக வேண்டும். இல்லை என்றால், கட்டாயப்படுத்தி காசு கேட்பார்கள். இல்லையேல், காசு இல்லை என சொல்லும் விவசாயியின் தானியங்களை கண்டுக்கொள்ளவே மாட்டார்கள், அப்படியேதான் கிடக்கும். விவசாயிகள் என்ன கம்பெனியிலா வேலை பார்க்கிறார்கள், சில தினங்கள் விடுமுறை எடுத்துக்கூட தங்களுடைய தானியங்களை எடை போடும்வரை காத்துக்கிடக்க. அவன், தன்னுடைய பிழைப்பை தேடி ஓடியாக வேண்டும்.
ஆடு, மாடு, தோட்டம், விளைச்சலை பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போல், அந்த தானியங்களை விற்றுவரும் பணத்தில்தான் தன்னுடைய கஷ்டங்களை போக்கிக்கொள்ள முடியும். எனவே, வேறு வழியின்றி அந்த ஊழியர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். உதாரணமாக 10 மூட்டை மணிலா கொண்டு சென்றால், 300 ரூபாய் லஞ்சம் கேட்டு பெறுகிறார்கள். புகார் கொடுக்கவும் அந்த இடத்தில் தொடர்பு எண் ஏதும் இருக்காது. `விவசாயிகள் எடை போடுவதற்கோ, சாக்கு மாற்றுவதற்கோ கட்டணம் தரவேண்டாம் – நிர்வாகம்’ என கடமைக்கென பதாகை வைத்திருப்பார்கள். ‘நிர்வாகம்’ என பதாகை வைப்பதால் என்ன பயன், யாரிடம் நாங்கள் தேடுவது நிரந்தர தீர்வை. தொடர்ச்சியாக நடைபெறுகிறது எனும்போது, உள்ளே வேலை செய்யும் அதிகாரிகள் ஆதரவு இல்லாமல் இருக்குமா? எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் விஷ்ணப்பன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர், திண்டிவனம் சார் ஆட்சியரும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான அரசின் நடவடிக்கை குறித்து கேட்பதற்காக விஷ்ணப்பனை தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. அவர் பதிலளிக்கும் பட்சத்தில் அதை உரியப் பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.