திருச்சி: “தேசிய கல்விக் கொள்கை வந்தால், தமிழ் மட்டுமல்ல அனைத்து மாநில மொழிகளும், அனைத்து தேசிய இனங்களின் தாய்மொழியும் இருக்கப்போவது இல்லை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மறைந்த மாநில ஒருங்கிணைப்பாளரான சாகுல் அமீதின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தேசிய கல்விக் கொள்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தேசிய கல்விக் கொள்கை வந்தால், தமிழ் மட்டுமல்ல அனைத்து மாநில மொழிகளும், அனைத்து தேசிய இனங்களின் தாய்மொழியும் இருக்கப்போவது இல்லை. அவர்களின் நோக்கமே இந்தி, சமஸ்கிருதம். ஆங்கிலம்கூட கிடையாது.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடால் விவசாயிகளுக்கு நல்லது என்று சொன்னது போலத்தான் இதுவும். தேசிய கல்விக் கொள்கையில் எங்களது மொழியை முன்நிறுத்துவதால் வரலாறு, இலக்கியம் இருக்குமா? 3-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் படிக்கலாம் என்று கூறுகின்றனர்.
பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் கூறுகின்றனர், புதிய கல்விக் கொள்கை என்பது நமது குழந்தைகளுக்கான மரண சாசனம் என்று. நான் சொல்லவில்லை இந்த வார்த்தையை. நீட் தேர்வு எழுத செல்லும் 16-17 வயது பிள்ளைகளுக்கே ஒரு முதிர்ச்சி, ஏச்சு பேச்சுக்களைத் தாங்கிக் கொள்ளக்கூடிய பக்குவம் வரவில்லை. இதனால், சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
3,5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பதை கற்பனை செய்து பாருங்கள். உலகிலேயே முதலிடத்தில் இருக்கக்கூடிய நாடான தென் கொரியாவில், 8 வயதில்தான் பிள்ளைகளை 1-ம் வகுப்பில் சேர்க்கிறது. இங்கு 8 வயதில் பொதுத் தேர்வை எழுத சொல்கின்றனர். இதெல்லாம் எவ்வளவு கொடுமை” என்று அவர் கூறினார்.