புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (50). இவர் இருசக்கர வாகனத்தில் அறந்தாங்கி நோக்கி வந்தபோது சாலை விபத்து ஏற்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படட்டார். அப்போது, மதிவாணனுக்கு இடது காலின் கட்டைவிரல் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
அங்கு பணியில் இருந்த மருத்துவ பணியாளர் அவருக்கு தையல் போட்டுள்ளார். தொடர்ந்து, வேறு ஏதேனும் பிரச்னைகள் இல்லாததால், மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்குச் சென்ற மதிவாணனுக்கு அடுத்த நாளே காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கூட்டிச் சென்றனர். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, மதிவாணனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தையல் போட்ட பகுதியின் உள்ளே சில சிறிய ஜல்லிக்கற்கள் இருந்துள்ளன. மதிவாணன் விபத்தில் சிக்கியபோது தரையில் கிடந்த கற்கள் காலின் உள்ளே போயிருந்துள்ளன. அதையடுத்து தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் மூலம் காலில் இருந்த கற்கள் அகற்றப்பட்டன. கற்களின் துகள்கள் உள்ளே இருந்ததுகூட தெரியாமல், அவசரகதியில் அலட்சியத்துடன் அரசு மருத்துவமனை பணியாளர்கள் நோயாளிக்கு சிகிச்சையளித்த சம்பவம் அறந்தாங்கியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சேகரிடம் கேட்டபோது, “சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு உடனே மெமோ கொடுத்து விளக்கம் பெற்றுள்ளேன். அந்த அறிக்கையை மாவட்ட மருத்துவ இணை இயக்குநரிடம் சமர்ப்பித்திருக்கிறேன்” என்றார்.
இது குறித்து மருத்துவ இணை இயக்குநரிடம் கேட்டபோது, “விசாரணை நடைபெற்று வருகிறது. யார்மீது தவறு இருக்கிறதோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.