லண்டன்: லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல், அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ராணியின் கணவர் பிலிப், தந்தை ஜார்ஜ் VI, தாய் எலிசபெத் ஏஞ்சலா, சகோதரி மார்கரெட் ஆகியோரின் உடல்களும் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களுக்கு அருகில் இரண்டாம் எலிசபெத்தின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, இறுதி ஊர்வலத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது சகோதரர்கள், சகோதரி, மகன்கள் ஆகியோர் ராணுவ வீரர்களுடன் அணிவகுத்துச் சென்றனர். அப்போது மன்னர் மூன்றாம் சார்லஸ் தாயை பிரியும் கடைசி தருணத்தில் சோகத்துடன் அஞ்சலி செலுத்தினார்.
ராணி எலிசபெத்தின் சவப்பெட்டியில் என்ன இருக்கிறது?
சவப்பெட்டியில் பூங்கொத்துக்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்கொத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறப்பு அர்த்தத்தை கொண்டுள்ளது. ராணி 1947 இல் இளவரசர் பிலிப்பை மணந்தபோது தனது திருமண பூங்கொத்தில் இருந்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மிர்ட்டல் வகை பூ ஆகும். இது ராணியின் மகிழ்ச்சியான திருமணத்தை குறிக்கிறது.
அதுமட்டுமின்றி, ரோஸ்மேரி, ஆங்கில ஓக் மற்றும் அவர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை குறிக்கும் வகையில் ஏப்ரல் பூக்கள் மற்றும் டஹ்லியாஸ், ரோஜாக்கள், இலையுதிர்கால ஹைட்ரேஞ்சாஸ், செடம், ஸ்கேபியஸ் ஆகியவை சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பூக்கள் அனைத்தும் அரசத்துக்கு குடும்பத்துக்குச் சொந்தமான பக்கிங்ஹாம் அரண்மனை, கிளாரன்ஸ் ஹவுஸ் மற்றும் ஹைக்ரோவ் ஹவுஸ் தோட்டங்களில் இருந்து மன்னர் மூன்றாம் சார்லஸால் தேர்ந்தெடுக்கப்பட்டு பறிக்கப்பட்டது. பூங்கொத்தில் மன்னர் சார்லஸ் எழுதிய கடிதமும் இடம்பெற்றுள்ளது.
இதுதவிர, இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் ஒரு குஷன் மீது வைக்கப்பட்டு சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கோல் ஒன்றும் கிரெனேடியர் காவலர்களின் கொடியும் இடம்பெற்றுள்ளன. கிரெனேடியர் காவலர்கள் என்பவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தின் காலாட்படை படைப்பிரிவு ஆகும். இந்தப் படை ராணியின் உடலை அவர் வாழும்போதும் மரணத்திற்கு பிறகும் பாதுகாக்கவே ஏற்படுத்தப்பட்ட படைப்பிரிவு ஆகும்.