கோவை: தனது பேச்சுக்காக ஆ.ராசா எம்.பி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என மன்னார்குடி ஸ்ரீ ராமானுஜ ஜீயர் வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கட்டாஞ்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தண்டி பெருமாள் கோயிலுக்கு மன்னார்குடி ஸ்ரீ ராமானுஜ ஜீயர் நேற்று (செப்.19) மாலை வந்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஸ்ரீ ராமானுஜ ஜீயர் கூறும்போது, “சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா இந்து சமய மக்களை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். தன்னை ஒரு இந்து என குறிப்பிட்டு தேர்தலில் போட்டியிட்ட ராசா தன் பெற்றோரை குறை சொல்கிறாரா. குறிப்பிட்ட மதத்தை அசிங்கமாக விமர்சிக்க கூடியவரை கைது செய்யாமல் இருப்பது அரசாங்கத்துக்கே கேவலத்தை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டின் இந்து கலாச்சாரமும், அதன் பாரம்பரியமும் உலக அளவில் பிரசித்தம் என்ற நிலையில், இதே தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இதனை மோசமாக பேசும் ஆ.ராசாவை தமிழக முதல்வர் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் திமுகவின் கொள்கையே இந்து விரோதம் தானா என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். ஆ.ராசா தனது பேச்சுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இந்துக்களாக இருப்பவர்கள் குறித்து ராசா கூறியது போல் மனு தர்மத்தில் இல்லை. பிற மதங்களை இது போல் கொச்சையாக விமர்சித்து விட முடியுமா” என்றார்.