அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லியில் முந்தைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 22-ம் தேதி டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி அன்று இரவு டெல்லி அசோகா ஹோட்டலில் நடந்த ஜனாதிபதி பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர், அவர் புதிய ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யப்பட்ட திரௌபதி முர்முவின் பதவியேற்புவிழாவில் கலந்துகொள்வதாகவும் திட்டமிடப்பட்டது.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்கவும் திட்டமிட்டார். அப்போது, பெருவாரியான பொதுக்குழு நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக இருப்பதைச் சுட்டிக்காட்டி பா.ஜ.க-வின் ஆதரவைப் பெற திட்டமிட்டு, சந்திப்புக்காக நேரம் கேட்கப்பட்டது. ஆனால், எடப்பாடியைச் சந்திக்க மோடி, அமித் ஷா இருவரும் நேரம் ஒதுக்கவில்லை.
இந்தச் சூழலில், அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில், எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. அதேபோல், அ.தி.மு.க தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் அவருக்குச் சாதமாகவே உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது. நீதிமன்றத் தீர்ப்புகள் தனக்குச் சாதகமாக வரவே எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவந்தார். இந்த நிலையில், இன்று இரவு 9 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் செல்கிறார். நாளை பிரதமர் மோடி, அமித் ஷாவைச் சந்திக்கவிருக்கிறார்.
இது குறித்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் விசாரித்தோம். “தி.மு.க-வுக்குப் போட்டியாக டெல்லி ஷோகேத் பகுதியில் அ.தி.மு.க-வுக்குக் கட்சி அலுவலகம் கட்டப்பட்டு, அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்திருக்கின்றன. கடந்த மே மாதமே கட்சி அலுவலகத்தைத் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், உட்கட்சிப் பிரச்னை காரணமாக இது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நீதிமன்றத் தீர்ப்புகள் எடப்பாடிக்கு ஆதரவாக வந்திருப்பதால் ஓரிரு வாரங்களில் அலுவலகத்தைத் திறக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக மோடி, அமித் ஷாவுக்கு நேரில் அழைப்பு விடுக்கவே எடப்பாடி டெல்லிக்குச் செல்கிறார். சந்திப்புக்கான வேலைகள் மூன்று நாள்களுக்கு முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டன. எடப்பாடியுடன் எஸ்.பி.வேலுமணி மற்றும் சில அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செல்கின்றனர்.
இந்தச் சந்திப்பின்போது, வருமான வரித்துறை வழக்கு நெருக்கடி குறித்தும், பொதுக்குழு வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக வந்திருப்பதால் அதைப் பற்றிப் பேசவும் வாய்ப்புள்ளது. மோடி, அமித் ஷா உடனான சந்திப்புக்கு பின்னர் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிடவிருக்கிறார். இதையடுத்து நாளை இரவு எடப்பாடி சென்னை திரும்புகிறார்” என்றனர்.