நாமகிரிப்பேட்டையில் பயங்கரம்; பேரூராட்சி அலுவலகத்தில் காவலாளி கொடூரக் கொலை: கம்பத்தில் உடலை கட்டி தொங்க விட்ட கும்பல்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில், இரவு காவலாளியை கொடூரமாக கொலை செய்த கும்பல், அலுவலக வளாகத்தில் உள்ள இரும்பு கம்பியில் உடலை கட்டி தொங்க விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், சின்னஅரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் (60). இவர், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில், கடந்த 10 ஆண்டுகளாக இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பணிக்கு வந்தார். அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடப்பதால், அங்கிருந்த பொக்லைன் ஆபரேட்டருடன் நள்ளிரவு 2 மணி வரை, பரமசிவம் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில், துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்த போது, டூவீலர்கள் நிறுத்துவதற்காக ஆஸ்பெட்டாஸ் ஷீட்டால் போடப்பட்ட ஷெட்டில் உள்ள இரும்பு கம்பத்தில், பரமசிவம் கால்கள் மற்றும் உடல் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், தூக்கில் சடலமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர். தகவலறிந்து நாமகிரிப்பேட்டை போலீசார்  வர தாமதமானதால், ஆத்திரமடைந்த பரமசிவத்தின் உறவினர்கள், ஆத்தூர்-ராசிபுரம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, சிலர் பரமசிவம் தூக்கில் தொங்க விடப்பட்டிருந்ததை போட்டோ, வீடியோ எடுத்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனால் இச்சம்பவம் வைரலானது. இந்நிலையில், நாமக்கல் மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அவரிடம் பரமசிவத்தின் உறவினர்கள் கூறுகையில், `கொலையாளிகளை கைது செய்யும் வரை மறியலில் ஈடுபடுவோம்,’ என்றனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதியளித்ததால் கலைந்து சென்றனர். அதை தொடர்ந்து, கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பரமசிவத்தின் சடலத்தை போலீசார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த கும்பல், உடலை ஷெட்டில் உள்ள இரும்பு கம்பியில் கட்டி தூக்கில் போட்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயம், பரமசிவத்தின் உடலில் எங்கும் காயம் இல்லை. எனவே, அவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க, ஏடிஎஸ்பி சேகர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில், தினமும் இரவு 10 மணிக்கு மேல், போதையில் வாலிபர்கள் அதிகளவில் சுற்றி திரிவதால் அவர்களில் ஏதேனும் ஒரு கும்பலுக்கு, இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையான பரமசிவத்திற்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.