“கணவன் என்ன செய்தாலும் மனைவி பின்பற்ற வேண்டும் என்பதில்லை” – அமரிந்தர் சிங்

பஞ்சாப்: தனது மனைவி பாஜகவில் இணைவாரா என்ற கேள்விக்கு பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் பதில் கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரிந்தர் சிங் நேற்று பாஜகவில் இணைந்தார். அதோடு, தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை, பாஜகவில் இணைத்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த நவம்பர் 2ம் தேதி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து 2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டார். பஞ்சாபின் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 28 தொகுதிகளில் இவரது கட்சி போட்டியிட்டது. எனினும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

இதையடுத்தே, பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். அமரிந்தர் சிங் பாஜகவில் இணைந்தாலும், அவரின் மனைவி பிரனீத் கவுர் இன்னும் காங்கிரஸ் உறுப்பினராகவே உள்ளார். பிரனீத் கவுர் 2009-2014 வரை மன்மோகன் சிங் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். தற்போது பாட்டியாலா தொகுதியில் காங்கிரஸ் எம்பியாகவும் இவர் உள்ளார். கணவர் மாற்று கட்சி சென்றாலும், கவுர் காங்கிரஸில் இருந்து விலகவில்லை. அதேநேரம் காங்கிரஸும் அவரை ராஜினாமா செய்ய வற்புறுத்தவில்லை.

இதனிடையே, பாஜகவில் இணைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமரிந்தர் சிங்கிடம் அவரின் மனைவி பாஜகவில் இணைவாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு “கணவன் என்ன செய்தாலும் மனைவி பின்பற்ற வேண்டும் என்பது அவசியமில்லை” என்று தெரிவித்தார். அதேநேரம், பாஜக மூத்த தலைவர் ஒருவர் “பிரனீத் கவுர் பதவியை ராஜினாமா செய்ய காங்கிரஸ் வற்புறுத்தினால், இடைத்தேர்தல் வரும். அது ஆம் ஆத்மிக்கு பயனளிக்கும். அதனால், அமைதியாக இருக்கிறார்கள்” என்று ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.