நீட் தேர்வுக்கான ஓஎம்ஆர் விடைத்தாளின் கார்பன் நகலையும் தாக்கல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நீட் தேர்வுக்கான ஓஎம்ஆர் விடைத்தாளின் கார்பன் நகலையும் தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை பெருமாள்புரத்தைச் சேர்ந்த மாணவர் எவால்ட் டேவிட், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வை கடந்த ஜூலை 17ல் எழுதினேன். தேர்வுக்கான ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியானது. அதில், எனது எண்ணில் நான் எழுதாத, வேறு நபரின் ஓஎம்ஆர் விடைத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், எனது மதிப்பெண் குறைந்திருக்கலாம். எனவே, நீட் தேர்வுக்கான விடைத்தாளை எனக்கு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, மனுதாரர் எழுதிய நீட் தேர்வுக்கான அசல் ஓஎம்ஆர் விடைத்தாள் மற்றும் அதன் கார்பன் நகலை தேசிய தேர்வு முகமையின் செயலர் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி வீ.பவானி சுப்பராயன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தேசிய தேர்வு முகமை தரப்பில், மனுதாரரின் ஓஎம்ஆர் விடைத்தாள் தாக்கல் செய்யப்பட்டது. அப்ேபாது நீதிபதி, ‘‘ஓஎம்ஆர் விடைத்தாளில் தவறு நடந்திருக்கலாம் என குற்றம் சாட்டும் நிலையில் அதன் கார்பன் நகலை தாக்கல் செய்யாதது ஏன்’’ என கேள்வி எழுப்பி, அதையும் தாக்கல் செய்யும்படி கூறி விசாரணையை செப். 23க்கு தள்ளி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.