சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக 20-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21, 22 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 23-ம் தேதி வடதமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
மன்னார் வளைகுடா, இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 20, 22 தேதிகளிலும், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 20-ம் தேதியும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.