சென்னை: நடிகர் ரவி மரியா தற்சமயம் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரத்திலும், நகைச்சுவை கலந்த வில்லன் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்க கூடியவர் ரவி மரியா.
நடிகராக அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா, மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்று பன்முகங்களை கொண்டவர்.
எஸ்.ஜே.சூர்யா அசோசியேட்
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய ரவி மரியா அவருடைய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் வெயில், தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். நடிகர் ஜீவா அறிமுகமான ஆசை ஆசையாய் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகி பின்னர் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜை கதாநாயகனாக்கி மிளகா படத்தை இயக்கினார்.

விஜய்க்கு கதை அஜித்திற்கு வசனம்
குஷி திரைப்படத்தில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய ரவி மரியா ஆசை ஆசையாய் படத்தின் கதையை அவருக்காகத்தான் எழுதியுள்ளார். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியானது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த “ஜீனு ஜீனு போடு நீனு” என்கிற பிரபல ஹிட் பாடலை எழுதியதும், நடிகர் அஜித் நடித்த ஆழ்வார் திரைப்படத்தில் வசனம் எழுதியதும் ரவி மரியா அவர்கள்தான்.

வெயில் வாய்ப்பு
சிறிய கதாபாத்திரங்களில் அவ்வப்போது நடித்து வந்தாலும் அவரை வெயில் திரப்படம் மூலம் முழு நேர நடிகனாக்கியது இயக்குநர் வசந்த பாலன் அவர்கள்தானாம். முதன் முதலில் வெயில் படத்திற்காக தன்னை நடிக்கச் சொன்னபோது, நீங்க மட்டும் சங்கர் சார் தயாரிப்புல படம் இயக்குவீங்க நா மட்டும் இயக்குநரா தொடராம வில்லனா நடிக்கணுமா என்று கேட்டாராம். பின்னர் வசந்தபாலனின் வற்புறுத்தலின் பேரில் மனமில்லாமல்தான் நடித்தாரான் ரவி மரியா

ஆத்மாவில் பாதி
நடிகனாகத்தான் என் வாழ்க்கை தொடரப் போகிறது என்று அன்று நினைக்கவில்லை. ஆனால் என்னை நடிகனாக்கிய பெருமை என் நண்பன் வசந்தபாலனைத்தான் சேறும் என்றும் தன் ஆத்மாவில் பாதி அவர் என்றும் ரவி மரியா நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். பழம் பெரும் நடிகர் அசோகன் முதல் மொட்டை ராஜேந்திரன் வரை முதலில் வில்லன்களாக நடித்தவர்கள் பிற்காலத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே பயணிக்கின்றனர். ஆனால் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த பின்னரும் ஜெயில் திரைப்படத்தில் கொடூர வில்லனாக நடித்து அந்த டிரெண்டை மாற்றியுள்ளார் ரவி மரியா என்பது கூடுதல் தகவல்.