புதுடெல்லி: கேரளாவில் 2018-ம் ஆண்டு வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, குருவாயூர் கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.5 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஆனால், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கியது சட்டவிரோதம் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், கோயில் நிதியை வழங்கியது சட்ட விரோதமானது என கடந்த 2020-ல் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கில், உண்டியல் பணத்தை நிவாரண நிதிக்கு வழங்க கோயில் நிர்வாகத்துக்கு அதிகாரம் இல்லை என மறு ஆய்வு அமர்வு கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து, ‘‘குருவாயூர் கோயில் நிர்வாகம் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியது அத்தியாவசியமான நன்கொடை நடவடிக்கைதான். இதில் முடிவு எடுக்கும் வரை இப்போது உள்ள நிலையே தொடர வேண்டும்” என்று கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.