“வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க சார்பில் காட்பாடி தொகுதிக்குஉட்பட்ட சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் நேற்று இரவு அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் அமைச்சர் துரைமுருகன் குறித்தும் அவரின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் பற்றியும் கடுமையாக விமர்சித்தனர். அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பேசுகையில், “காட்பாடியில் காட்டாட்சி நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில், துரைமுருகனின் காட்பாடி தொகுதியில் மட்டும் தினமும் 1,500 பேருக்கு உணவுக் கொடுத்து உதவினோம். அந்தசமயம், துரைமுருகனும், அவரின் மகனும் ஏலகிரி பங்களாவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை விரைந்து சரிப்படுத்தக்கோரி அறவழியில் போராட்டம் நடத்திய எங்களை பொய் வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தார்கள். வேலூரைப் பொறுத்தவரை கதிர் ஆனந்த்துதான் டி.ஐ.ஜி, எஸ்.பி-யைப்போல அதிகாரம் செலுத்துகிறார். காட்பாடி அரசுப் பள்ளியில் சமீபத்தில் அமைச்சர் துரைமுருகன் சைக்கிள் கொடுத்துவிட்டு, தன் வாழ்க்கை வரலாற்றை சொன்னபோது கரன்ட் கட்டாகிவிட்டது. அந்தப் பள்ளியில்தான் அவர் படித்ததாக கூறுகிறார். ஆனால், அதில் கழிவறை வசதியைக்கூட அவர் செய்து தரவில்லை. அதேபோல, துரைமுருகனின் வீடு இருக்கும் பகுதிக்கே சாலை வசதி இல்லை; சரியாகப் போடவில்லை; போட்டு இரண்டு வருஷம் ஆகிறது என்று அமைச்சர் துரைமுருகனே சொல்கிறார்.
மாநகராட்சி ஆணையாளர் விரைவாக அமைச்சரின் வீதிக்கு தார்சாலையோ, சிமெண்ட் சாலையோ அமைத்துத் தருமாறு அ.தி.மு.க கோரிக்கை விடுக்கிறது. அவர்தான் இந்த ஊருக்கு எதுவும் செய்யவில்லை. நாமாவது அவருக்கு செய்யலாம். தந்தை, மகனுக்கு காட்பாடி டி.எஸ்.பி-யும் பயங்கர விசுவாசம் காட்டுகிறார். ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கலாம். அதற்காக அடிமையாக இருக்கக்கூடாது. அந்த டி.எஸ்.பி-க்கு அ.தி.மு.க-வினரை கண்டாலே பிடிக்கவில்லை. மிரட்டி அச்சுறுத்துகிறார். இந்த பொதுக்கூட்டத்தை நடத்தக்கூடாது என்றுக்கூட அவர் அனுமதி கொடுக்காமல் மிரட்டினார். நாங்கள் எஸ்.பி-யைச் சந்தித்து அனுமதி பெற்றிருக்கிறோம்.
காட்பாடியை தலைமையிடமாகக் கொண்ட ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம், அதிக வட்டித் தருவதாக ஆசைக்காட்டி பொது மக்களிடமிருந்து சுமார் 30 ஆயிரம் கோடியை சுருட்டிக்கொண்டு வெளிநாட்டுக்கு தப்பிவிட்டது. இந்த மோசடி நிறுவனத்தை தப்பவிட்டதன் பின்னணியிலும் இதே டி.எஸ்.பி-தான் இருக்கிறார். இங்கு ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தார். அவரும் அந்த நிதி நிறுவனத்தில் ரூ.3 கோடி வைப்புத்தொகை வைத்திருந்தார். அதனால்தான் அந்த இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். எப்போதுமே காவல்துறையினருக்கு நாங்கள் மதிப்பளித்து தான் பழக்கம். அதற்காக சூடு, சுரணையை விட முடியாது. காவல்துறையினர் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.