மத்திய அமைச்சருடன் நரிக்குறவர்கள் சந்திப்பு: பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்காக பிரதமருக்கு நன்றி

சென்னை: நரிக்குறவர் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை நேரில் சந்தித்து பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி கூறினர்.

தமிழகத்தில் நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துசாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாகப் போராடி வந்தனர். இவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, பிரதமர் மோடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் அவரைச் சந்தித்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், தங்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினர்.

இது தொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் சமீபத்தில் பழங்குடியின பட்டியலில் இணைக்கப்பட்ட நரிக்குறவ சமூக மக்களை எனது இல்லத்துக்கு அழைத்துக் கலந்துரையாடினேன். இத்தகைய சிறப்பை வழங்கிய பிரதமருக்கு தங்களின் நன்றிகளைத் தெரிவித்தனர்.

மத்திய அரசின் இந்தநடவடிக்கையால், பழங்குடியினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இனி நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினருக்கும் கிடைக்கும். பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தைச் சேர்ப்பதற்கான மசோதா சட்டமாக இயற்றப்படும். அதன் பிறகு, தமிழகத்தின் திருத்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள், மத்திய அரசின் தற்போதைய நலத் திட்டங்களின் பயன்களைப் பெற முடியும்.

மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய கல்வி உதவித் தொகை, வெளிநாடுகளில் படிப்பதற்கான தேசிய கல்வி உதவித் தொகை, தேசிய ஆய்வு உதவித் தொகை, உயர்தரக் கல்வி, தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து சலுகை கடன்கள், பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவியருக்கான விடுதிகள் போன்ற திட்டங்கள் மூலம் இந்த இனத்தவர் பயன்பெற முடியும். மேலும், அரசுப் பணிகள் மற்றும்கல்வி நிறுவனங்களில் மாணவர்சேர்க்கை உள்ளிட்ட பயன்களையும் இவர்கள் பெற முடியும். இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.