மதுரை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருணாநிதி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம், கே.வேப்பங்குளம் கிராமத்தில் மலட்டாறு பகுதியில் புதிய மணல் குவாரிக்கு ஆட்சியர் அனுமதி வழங்கி உள்ளார். உரிய கள விசாரணை நடத்தாமல், மக்களிடம் கருத்து கேட்காமல் அரசியல்வாதிகளுக்குச் சாதகமாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்து அனுமதி பெற்றுள்ளனர். கே.வேப்பங்குளம் அருகே ஆற்றுப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. மணல்குவாரி செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து தண்ணீர் விநியோகத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மணல் குவாரி தொடர்பாக உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளை மாற்றி, அரசு புதிய விதிகளை உருவாக்குகிறது என கடும் அதிருப்தி தெரிவித்தனர். அரசு தரப்பில், பல்வேறு விதிகளுக்கு உட்பட்டே மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மணல் குவாரிக்கான விதிகள் குறித்து தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.