இந்த வயதில் இப்படியொரு அசாத்திய திறமையா? 71 வயதில் 11 கனரக வாகனங்களை ஓட்டும் கேரள பெண்!

ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து வருவது குறித்து அறிந்து வருகிறோம். அந்த வகையில் 11 விதமான கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமத்தை 71 வயது மூதாட்டி பெற்று சாதித்திருக்கிறார்.
வாகனங்களை ஓட்டுவதில் பொதுவாக ஆண்களே வல்லவர்களாக இருப்பார்கள். ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் ஓட்டுவதை கூட பெண்களால் திறம்பட செய்ய முடியாது என்ற கேலியான பதிவுகள் பலவும் சமூக வலைதளங்கள் வாயிலாக காணக்கிடைக்கிறது.
இப்படி இருக்கையில், கேரளாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது 71 வயதில் ஜே.சி.பி., கிரேன், பஸ், லாரி, ஆட்டோ ரிக்‌ஷா உட்பட 11 கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸை பெற்றிருக்கிறார்.
கேரளாவின் தோப்பும்படி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராதாமணி அம்மா. இவர் மணியம்மா என்றும் அழைக்கப்படுகிறார். ராதாமணி அம்மா தன்னுடைய 30வது வயதில்தான் வாகனங்களை ஓட்டவே கற்றுக் கொண்டாராம். அதுவும் மறைந்த அவரது கணவர் டி.வி.லாலின் உந்துதலால் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் வாகனம் ஓட்டுவது களிப்பூட்டுவதாக ராதாமணி அம்மா உணர்ந்ததை அடுத்து, பல்வேறு வகையான வாகனங்களை ஓட்ட கற்றுக் கொண்டிருக்கிறார்.

1978ல் கணவர் லால் A-Z என்ற டிரைவிங் ஸ்கூல் தொடங்க அப்போதிருந்து வாகனங்களை ஓட்டி வருகிறார் ராதாமணி அம்மா. முதல் முதலாக பஸ் மற்றும் டிரக் வாகனங்களுக்கான லைசென்ஸை ராதாமணி 1988ம் ஆண்டு பெற்றிருக்கிறார். 2004ம் ஆண்டு லால் மறைந்த பிறகு தனது பிள்ளைகளுடன் சேர்ந்து அந்த டிரைவிங் ஸ்கூலை நடத்தி வருகிறார்.
11 கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் முதல் கேரள பெண் என்ற பெருமையை பெற்றிருக்கும் ராதாமணி அம்மா களமசேரி பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கிற்கான டிப்ளமோ புரோகிராமிங் படித்து வருகிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.