புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் நேற்று பாஜவில் இணைந்தார். பஞ்சாப் முன்னாள் முதல்வராக இருந்தவர் அமரீந்தர் சிங். உட்கட்சி மோதலால் காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கினார். சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டமன்ற பேரவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைத்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் கட்சி தோல்வியுற்றது. பாட்டியலா தொகுதியில் போட்டியிட்ட அமரீந்தரும் படுதோல்வி அடைந்தார்.
இந்நிலையில் அமரீந்தர் சிங் நேற்று டெல்லிக்கு சென்று பாஜ தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர் மாலையில் பாஜ அலுவலகத்தில் நடந்த விழாவில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டு அவரை கட்சியில் வரவேற்றனர். அவருடன் ஆதரவாளர்கள் பலரும் பாஜவில் சேர்ந்தனர்.