புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது உதவியாளரும் நடிகையுமான அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான ரூ46 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில், ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போது கல்வி துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார்.
மேலும் இவரது உதவியாளரும் நடிகையுமான அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் சொந்தமான ரூ46 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அடையாளம் கண்டு பறிமுதல் செய்வதற்கு நடவடிக்ைக எடுத்துள்ளது. கொல்கத்தாவில் பண்ணை வீடு, நிலம் உட்பட 40 அசையா சொத்துக்கள் அமலாக்கத்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை தவிர 35 வங்கி கணக்குகளில் ரூ7.89கோடி டெபாசிட் பணத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.