பிரதமர் நரேந்திர மோடியை, பாரதிய ஜனதா கட்சியை அகில இந்திய அளவில் கடுமையாக எதிர்ப்பவர்களில் முக்கியமானவர் மம்தா பானர்ஜி. காங்கிரஸ் கட்சியை விட பிராந்திய கட்சிகள் மோடியை, பாஜகவை எதிர்த்து வருகின்றன.
2014 முதல் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் மோடிக்கு எதிராக யாரை முன்னிறுத்தலாம் என்ற பட்டியலை அரசியல் நோக்கர்கள் தயாரித்தால் அதில் மம்தா பானர்ஜியின் பெயரும் தவறாமல் இடம்பெறும்.
ஆனால் நேற்று மேற்கு வங்க சட்டப்பேரவையில் மம்தா பேசிய கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற ஒன்றிய அரசின் அமைப்புகள் எதிர்கட்சிகளுக்கு எதிராக நடத்தும் ரெய்டுகளுக்குப் பின்னர் பிரதமர் மோடி இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஒன்றிய அரசு ஏஜென்சிகளின் வரம்பு மீறிய நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு வங்க சட்ட மன்றத்தில் மம்தா பானர்ஜி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
இந்த தீர்மானம் குறித்து பேசிய அவர், “தற்போதைய ஒன்றிய அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது. இந்த தீர்மானம் தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் எதிரானது அல்ல. ஒன்றிய அமைப்புகள் பாரபட்சத்துடன் செயல்படுவதை உணர்த்தவே இந்த தீர்மானம். எதிர்கட்சிகளுக்கு எதிராக நடத்தும் ரெய்டுகளுக்குப் பின்னர் பிரதமர் மோடி இருப்பதாக நான் நினைக்கவில்லை பாஜகவின் ஒரு சில தலைவர்கள் தான் தங்கள் சுயநலத்திற்காக இதன் பின்னணியில் இருப்பார்கள் என நினைக்கிறேன்.
சிபிஐ அமைப்பு பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கைகளை முறையாக தாக்கல் செய்வதில்லை. இந்த விஷயம் பலருக்கு தெரியாது. இந்த அமைப்புகளின் செயல்பாட்டால் தொழிலதிபர்கள் நாட்டைவிட்டு ஓடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது” என்று கூறினார்.