புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (செப்.20) அதிகாலை கைது செய்தனர்.
ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 87 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பி.தமிழ்செல்வன்(37) என்பவருக்குச் சொந்தமான படகில் அவருடன் சி.விஜி(28), ஏ.தினேஷ்(26), கே.ரஞ்சித்(27), எஸ்.பக்கிரிசாமி(45), எஸ்.கமல்(25), எஸ்.புனுது(41) மற்றும் எம்.கார்த்திக்(27) ஆகிய 8 பேர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 32 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களது மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காங்கேசன் துறை கடற்படை தளத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் மீனவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது சக மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.