கடையம் : கடையம் அருகே காட்டு பன்றிகளின் அட்டகாசத்தால் ஒரு ஏக்கர் வாழைகள் சேதமாகியுள்ளதால் விவசாயிக்கு லட்சக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குதொடர்ச்சிமலையொட்டியுள்ள பகுதியில் விளைநிலங்களில் காட்டு பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதை தடுக்கும் வகையில் காட்டுப்பன்றிகளை வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என்று வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். மேலும், காட்டுபன்றிகளை வனவிலங்குகள் பட்டியல் இருந்து நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும் தற்போது வரை வனத்துறை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் காட்டுபன்றிகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கடையம் அருகே பூவன்குறிச்சியை சேர்ந்த விவசாயி கனகராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை, கத்தரிக்காய், தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்து வருகிறார். கடந்த முறை நெல், உளுந்து. கத்தரி போன்ற பயிர்களை காட்டு பன்றிகள் மற்றும் மான்கள் நாசப்படுத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
அந்த இழப்பிலிருந்து இதுவரை அவர் மீளவில்லை. இந்நிலையில் தற்போது காட்டு பன்றிகள் கூட்டமாக நுழைந்து சுமார் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட 7 மாத வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் லட்சக்கணக்கில் அவருக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சேதமான பயிர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். அப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.