சென்னை: உருவ கேலி செய்யாதீங்க என சிம்பு பேசிய நிலையில், அவர் நடிப்பில் வந்த பழைய படங்களின் பாடல்களில் இருந்த வரிகளை போட்டு சிம்பு எப்படியெல்லாம் உருவ கேலி செய்துள்ளார் என பஞ்சாயத்தை கிளப்பி வந்த ப்ளூ சட்டை மாறன் அடுத்ததாக தற்போது இயக்குநர் கெளதம் மேனன் பக்கம் திரும்பி உள்ளார்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் கடந்த வாரம் வெளியானது.
வசூல் ரீதியாக படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறனுக்கும் அந்த படத்தை இயக்கிய இயக்குநர் கெளதம் மேனனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
வெந்து தணிந்தது காடு விமர்சனம்
பாம்பேக்கு போனால் டான் ஆகி விடலாமா? என்பதில் ஆரம்பித்து சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை தனது விமர்சனத்தில் படு மோசமாக விளாசித் தள்ளி இருந்தார் ப்ளூ சட்டை மாறன். ஆனால், அவரது விமர்சனத்தை எல்லாம் மீறி படம் மிகப்பெரிய வெற்றியை பாக்ஸ் ஆபிஸில் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உருவ கேலி பண்ணாதீங்க
வெந்து தணிந்தது காடு படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்ற நிலையில், சமீபத்தில் பேசிய நடிகர் சிம்பு இந்த படத்தில் என் உருவத்தை வைத்து சில விமர்சகர்களால் ட்ரோல் செய்ய முடியவில்லை என பேசியிருந்தார். மேலும், யாரையும் உருவ கேலி பண்ணாதீங்க என்றும் அவர் மறைமுகமாக ப்ளூ சட்டை மாறனை தாக்கிப் பேசியிருந்தார்.
வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனத்தில்
அதற்கு காரணம் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் யோகி பாபுவுக்கும் சிம்புவுக்கும் வித்தியாசமே தெரியலைன்னு சிம்புவின் உருவத்தை கேலியாக பேசி விமர்சித்து இருந்தார் ப்ளூ சட்டை மாறன். வலிமை பட விமர்சனத்தின் போதும், அஜித்தை பஜன்லால் சேட் என விமர்சித்தது ரசிகர்களை பயங்கர ஆத்திரத்தில் ஆழ்த்தியது.
சிம்புவுடன் சண்டை
உருவ கேலி பண்ணாதீங்க என சிம்பு சொன்ன நிலையில், போட்டுத் தாக்கு, குட்டி பிசாஸே என சிம்பு நடித்த படங்களின் பாடல்களில் பெண்களை ஆபாசமாக வர்ணிக்கும் வார்த்தைகளை எடுத்து போட்டு இதெல்லாம் உருவ கேலியில் வராத சிம்பு என சண்டை செய்து வந்தார் ப்ளூ சட்டை மாறன்.
கெளதம் மேனனுக்கு டைரக்ட் அட்டாக்
இந்நிலையில், இன்னொரு ஸ்டெப் மேலே போய் இயக்குநர் கெள்தம் மேனனை டைரக்ட்டாகவே தாக்கி ட்வீட் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். “சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில்..சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர். கௌதம் வாசுதேவ்..மேனன்.” என ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
மின்னலே படத்தில்
கெளதம் மேனன் இயக்குநராக அறிமுகமான மின்னலே படத்தில் வெறும் கெளதம் என்று மட்டுமே போட்டிருந்த நிலையில், அதன் பின்னர் ஏன் கெளதம் வாசுதேவ் மேனன் என உங்கள் பெயரை மாற்றிக் கொண்டீர் என்றும் இன்னொரு ட்வீட் போட்டு சண்டையை பெரிதாக்கி உள்ளார். மேலும், அசுரன் படத்திற்கு பிறகு தனுஷுக்கு எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தை கொடுத்து ஃபிளாப் செய்ததை போலவே மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்புவுக்கு வெந்து தணிந்தது காடு என்கிற ஃபிளாப் படத்தை கொடுத்துருக்கீங்க என நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளார்.
இறங்கி செய்யப் போறேன்
ப்ளூ சட்டை மாறன் பற்றிய கேள்விக்கு இயக்குநர் கெளதம் மேனன் அளித்த பேட்டியால் ட்ரிக்கர் ஆகி தான் தற்போது இப்படியொரு கேள்வியை ப்ளூ சட்டை மாறன் வைத்துள்ளாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருச்சிற்றம்பலம் படத்தை நல்ல படம்னு ப்ளூ சட்டை மாறன் பேசியதை குறிப்பிட்ட கெளதம் மேனன் வெந்து தணிந்தது காடு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுத்ததற்கு இறங்கி செய்யலாம்னு தோணுது என பேசியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் எனக் கூறுகின்றனர்.
நித்யா மேனனை கேட்கலையே
கெளதம் மேனனை பார்த்து இந்த கேள்வி கேட்கும் ப்ளூ சட்டை மாறன் திருச்சிற்றம்பலம் படத்துக்கு விமர்சனம் செய்யும் போது ஏன் அதில் நடித்த நித்யா மேனனை பார்த்து இந்த கேள்வி கேட்கல? என சிம்பு ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கமெண்ட் பக்கத்தில் வெளுத்து வாங்கி வருகின்றனர். மேலும், ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகளை பதிவிட்டு மீம் போட்டு திட்டித் தீர்த்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட்டுக்கு கெளதம் மேனன் என்ன பதிலடி கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை.