ஹைதராபாத், தெலுங்கானாவில், எம்.எல்.ஏ.,வின் உதவியாளர் திருமணமான பெண்ணிடம் நேற்று தகாத முறையில் நடக்க முயற்சித்து, பின் அவரை பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹைதராபாத் ஜூப்ளி ஹில்சின் எம்.எல்.ஏ., மாகண்டி கோபிநாத்தின் தனி உதவியாளராக விஜயஷிம்கா என்பவர் உள்ளார். சமீபத்தில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகளின்போது, நிஷா, ௩௫, என்ற பெண் விஜயஷிம்காவுக்கு அறிமுகமாகியுள்ளார். அப்பெண்ணுக்கு திருமணமாகி, சூரஜ் என்ற கணவர் உள்ளார். இருப்பினும், நிஷாவை அடிக்கடி தொடர்பு கொண்டு, விஜயஷிம்கா பேசி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை நிஷாவின் வீட்டுக்கு குடிபோதையில் சென்ற விஜயஷிம்கா, அவரை தன் ஆசைக்கு இணங்கும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால், நிஷா மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விஜயஷிம்கா, பீர் பாட்டிலால் அப்பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.இதன்பின், நிஷா தன் கணவருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற சூரஜ், தன் மனைவியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து, அவர் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர், எம்.எல்.ஏ.,வின் உதவியாளர் என்பதால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement