சூனாம்பேடு அருகே வீடியோ கால் மூலம் செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த பிறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரின் மனைவி புஷ்பா (33) இவர், இரண்டாவது முறையாக கருத்தரித்து இருந்த நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சூனாம்பேடு, இல்லிடு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புஷ்பா சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில் செவிலியர் 2 பேர் மட்டுமே இருந்துள்ளனர்.
இந்நிலையில், புஷ்பா தற்போது செய்த ஸ்கேன் ரிப்போர்ட்டில், பிரசவத்தில் பிரச்னை உள்ளது என குறிப்பிட்டிருந்தது. இதனை அடுத்து இங்கேயே பிரசவம் பார்த்து விடலாம் என செவிலியர்கள் தெரிவித்ததன் பேரில், நேற்று மாலை பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது குழந்தை தலைகீழாக கால்கள் மட்டுமே முதலில் வந்துள்ளது. இதையடுதது செய்வதறியாது தவித்த செவிலியர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் மருத்துவர் பாலுவிடம் போன் செய்து தகவலை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து வீடியோ கால் மூலம் மருத்துவர் சொன்ன ஆலோசனைபடி, செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். ஆனால், எவ்வளவு முயன்றும் குழந்தையின் தலை மட்டும் வெளியே வரவில்லை. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை வரும் வழியிலேயே இறந்து பிறந்துள்ளது . இதனை அடுத்து மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அலட்சியப் போக்கால் குழந்தை இறந்து பிறந்ததாக, குழந்தையின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர் வாங்க மறுத்து விட்டார்.
இது குறித்து உறவினர்கள், சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, மருத்துவர் இல்லாததால் குழந்தை இறந்து பிறந்ததாகவும், உடனடியாக மருத்துவர்களை நியமிக்கக் கோரியும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுராந்தகம் மரக்காணம் சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பரணிதரன் சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையடுத்து நம்மிடம் பரணிதரன் கூறுகையில்… கடந்த ‘ வெள்ளிக் கிழமையே குழந்தை தலை திரும்பாமல் இருக்கிறது’ என ஸ்கேன் செய்தபோது தெரியவந்துள்ளது. ஆனால், அவர்கள் திங்கட்கிழமை மதியம், முழு பிரசவ வலி வந்தபோது தான் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். ஆரம்ப கட்டத்திலேயே வந்திருந்தால் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கலாம், அவர்கள் கடைசி கட்டத்தில் வந்ததால் இவ்வாறு பிரசவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தாய், செய் ஆகிய இருவரையும் காப்பாற்ற வேண்டும் என்று தான் முயற்சி செய்துள்ளார்கள். இது குறித்து உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர், நேற்று இரவே முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளோம், மேலும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM