பழநி : சாக்கடை நீர் கலந்து பழநி வையாபுரி குளம் மினி கூவமாக மாறி வருவதால் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழநி நகரம் 6.63 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்நகராட்சியில் தற்போது சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 1993ம் ஆண்டு சுமார் 13 வார்டுகளின் மக்கள் பயன்பெறும் வகையில் 6 ஆயிரத்து 458 மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. இத்திட்டத்தில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடையில் தற்போது அடைப்புகள் ஏற்பட்டும், பழுதடைந்தும், உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இக்கழிவுநீர் அனைத்தும் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி தற்போது வையாபுரி குளம் மற்றும் சிறுநாயக்கன் குளத்தில் கலக்கிறது. இதனால் புண்ணிய குளமாக கருதப்பட்டு வந்த வையாபுரி குளம் தற்போது மினி கூவமாக மாறி உள்ளது. எனவே, வையாபுரி குளத்தில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க பழநி நகரில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து பழநி நகராட்சி நிர்வாகம் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் சுமார் ரூ.104 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நகராட்சி நிர்வாக ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்ட மதிப்பீன்படி 93 ஆயிரத்து 174 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் குழாய் அமைக்கப்பட உள்ளது. 4 ஆயிரத்து 651 ஆர்.சி.சி வால் அமைக்கப்பட உள்ளது. லட்சுமிபுரம் மற்றும் மதனபுரம் ஆகிய இடங்களில் லிப்ட்டிங் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது.
பெரியப்பா நகர் மற்றும் வ.உ.சி பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் நீருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. 17 ஆயிரத்து 521 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக 2013- 14ம் நிதியாண்டிலேயே ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதர நகராட்சி பங்குத்தொகையான ரூ.55.39 கோடியை தரும் அளவிற்கு நகராட்சியின் நிதி நிலைமை இல்லை. எனவே, முழு மானியமாக வழங்க நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இத்திட்டம் தற்போது நிறைவேற்ற முடியாமல் முடங்கிப்போய் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பழநி நகராட்சித்தலைவர் உமாமகேஸ்வரியிடம் கேட்டபோது, ‘‘பழநி நகருக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே பலமுறை சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசினார். ஆனால், அப்போதைய அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தமிழக முதல்வரிடம் பாதாள சாக்கடை திட்டத்தின் தேவை குறித்து விரிவாக வலியுறுத்தப்பட்டது. பழநி நகருக்கு பாதாள சாக்கடை திட்டம் நிச்சயம் கொண்டு வரப்படும். இதற்கான பூர்வாங்க பணிகள் துவங்க உள்ளன’’ என்றார்.