உத்தர பிரதேச மாநிலத்தில், கபடி வீரர்களுக்கு கழிப்பறையில் உணவு வினியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் சஹாரன்பூரில், கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்று உள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு, கழிவறையில் இருந்து உணவு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. கழிவறையில் பாத்திரங்களில் உணவுப் பண்டங்கள் வைக்கப்பட்டு அங்கிருந்து வீரர்கள் தட்டுகளில் உணவுகளை எடுத்துச் செல்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில், விளையாட்டு வீரர்கள் உணவை எடுத்துக் கொண்டு கழிப்பறைக்கு வெளியே செல்வதைக் காண முடிகிறது. மேலும், ஊழியர்கள் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு, உணவு சமைக்கப்படும் நீச்சல் குளத்தின் அருகே வெளியே கொண்டு வருவது தெரிகிறது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சஹாரன்பூர் மாவட்ட விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக மாநில அரசும் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இட நெருக்கடி காரணமாக, கழிவறையில், உணவு வைக்கப்பட்டதாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரி அனிமேஷ் சக்சேனா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக சஹாரன்பூர் மாவட்ட நீதிபதி அகிலேஷ் சிங் கூறுகையில், “இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, மாவட்ட விளையாட்டு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மூன்று நாட்களில் விசாரணை முடிந்து அறிக்கை கிடைக்கும். அதன்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த விவகாரத்தில், ஆளும் பாஜக அரசை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.