இயற்கை விவசாயத்தால் மரப்பயிர் சாகுபடியால் மகத்தான மாற்றம்: விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சி: காவேரி கூக்குரல் இயக்கத்தின் பரிந்துரையால் இன்று ஏராளமான விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறுவதால் ஒற்றை பயிர் விவசாயத்திற்கு பதிலாக மரம் சார்ந்த பல பயிர் விவசாயம் செய்ய முடிகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஊடுபயிர்கள் மூலம் தொடர் வருமானமும், மரங்களின் மூலம் சில ஆண்டுகளுக்கு பிறகு மொத்த வருமானமும் கிடைக்கிறது. இது போன்ற இன்னும் பல நன்மைகளை காவேரி கூக்குரல் இயக்கம் தொடர்ந்து விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து வருகிறது. களப்பணியாளர்கள் கிராமம் கிராமமாக நேரடியாக சென்று இதன் நன்மைகளை விளக்கின்றனர். விவசாயிகளின் நிலங்களுக்கு நேரடியாகவே சென்று அவர்களின் மண்ணிற்கும் தண்ணீருக்கும் ஏற்ற மரங்களை பரிந்துரைக்கின்றனர்.

இதுமட்டுமின்றி மரம் சார்ந்த விவசாயத்தில் முன்னோடி விவசாயிகளாக திகழ்பவர்களின் தோட்டத்திலேயே களப்பயிற்சி, கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றனர். இப்படி நேரடியாக முன்னோடி விவசாயிகளின் நிலங்களுக்கே சென்று பயிற்சி மேற்கொள்வதால், விவசாயிகள் பெறக்கூடிய நன்மைகளை வெறும் வார்த்தைகளாக இன்றி அவர்கள் அடைந்திருக்கும் வெற்றியை கண்கூடாக காணும் வாய்ப்பு மற்ற விவசாயிகளுக்கு கிடைக்கிறது. அதுபோன்ற பல களப்பயிற்சிகள், கருத்தரங்குகள் பொள்ளாச்சி வேட்டைகாரன் புதூரை சேர்ந்த முன்னோடி விவசாயி வள்ளுவன் அவர்களின் தோட்டத்தில் நடைபெற்றுள்ளது. திருவள்ளுவன் அவர்கள் 36 ஏக்கர் நிலத்தில் கடந்த 12 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கத்தால் சான்றளிக்கபட்ட இயற்கை விவசாயியாக உள்ளார்.

இவர் வெற்றியின் தனித்துவம் என்னவென்றால், இவர் ஒற்றை முறை சாகுபடி முறையை விடுத்து பல பயிர் சாகுபடி முறையை பல அடுக்கு முறையில் செய்தது தான். இவ்வாறு செய்ததன் மூலம் அவருடைய மண்ணின் கரிம வளம் எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது. அவர் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாற விரும்பிய போது அவருடைய மண்ணின் வளம் பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவருடைய மண்ணில் கரிம அளவு 0.5க்கும் குறைவாகவே இருந்ததாக பரிசோதனை முடிவு தெரிவித்தது. இத்தனை குறைவான மண் வளத்தில் லாபகரமான விவசாயம் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையிலிருந்து மண்ணை மீட்க மரங்களினிடையே பல அடுக்கில் பல பயிர் சாகுபடி முறையை பின்பற்றி தென்னை மரங்களுக்கிடையே, டிம்பர் மரம், பாக்கு மரம், வாழை மரம், ஜாதிக்காய், எழும்பிச்சை, சாத்துக்குடி போன்ற பயிர்களை வளர்த்துள்ளார்.

அடுக்கடுக்காக மரம் வளர்ந்ததால் பயிர்களுக்கு சரிசமமாக சூரியவொளி கிடைத்துள்ளது. மரங்களின் இலைதழைகள் உருவான மூடாக்கினால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்ச பட்டுள்ளது, இந்த முறை தொடரத் தொடர மண்ணின் வளம் அதிகரித்துள்ளது 12 ஆண்டுகால உழைப்புக்கு பின் சமீபத்தில்  இவர் மண் வளத்தை பரிசோதித்த போது மண்ணின் கரிம அளவு 3.36 அளவு உயர்ந்துள்ளது. பெரும் வனத்தில் கூட இப்படியொரு வேகமான வளர்ச்சி பல ஆண்டுகள் ஆனாலும் உருவாவது கடினம் என்று நிபுணர்களே ஆச்சர்ய பட்டுள்ளனர். இது போல் பிரமிப்பூட்டும் பல விவசாய வெற்றி கதைகளை அந்த விவசாயிகளிடமிருந்தே நேரடியாக அறிந்து கொள்ள பல கருத்தரங்குகளை காவேரி கூக்குரல் இயக்கம் நடத்துகிறது.

அதுமட்டுமின்றி விவசாயிகளின் கரங்களுக்கு மரக்கன்றுகள் எளிமையாக சென்று சேர வேண்டும் என்பதற்காக ரூ.3 க்கு மரக்கன்றுகளை வழங்கி வருகிறது. தமிழகமெங்கும் உள்ள 30க்கும் மேற்பட்ட ஈஷா நாற்றுப் பண்ணைகளில் 14 வகைக்கும் மேலான டிம்பர் மரக்கன்றுகளை ரு.3க்கு விவசாயிகள் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் பல முன்னோடி விவசாயிகள், நிபுணர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் திருச்சி தொப்பம்பட்டியில் உள்ள டாக்டர் தோட்டம் லிட்டில் ஊட்டியில் செப்டம்பர் 18 அன்று நடந்தது. இதில் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் வருவாயை பெருக்கும் வழிகள், மற்றும் லாபகரமான முறையில் சாகுபடி செய்யும் உத்திகளை முன்னோடி விவசாயிகள் பகிர்ந்து கொண்டனர். இதில் தமிழகமெங்குமிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.