ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள திரையரங்குகள்!

ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, INOX நிறுவனம் வடிவமைத்துள்ள ஒரு மல்டிபிளக்ஸ் பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள், இனி திரையரங்குகளில் திரைப்படங்களை கண்டு களிக்கலாம். ஆம்… முப்பது வருடங்களுக்கு பிறகு அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இனி நாட்டின் மற்ற பகுதியில் உள்ள மக்களை போல, அவர்களும், மல்டிபிளெக்ஸில் திரைப்படத்தைப் பார்த்து, அனுபவிக்க முடியும்.

அனைத்து காஷ்மீரிகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், முப்பது வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீநகரில் பள்ளத்தாக்கில் முதல் மல்டிபிளக்ஸ் திறக்கப்பட்டது. காஷ்மீரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் மல்டிபிளக்ஸ் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவால் இன்று திறக்கப்படுகிறது.

ஸ்ரீநகரில், INOX வடிவமைத்துள்ள மல்டிபிளக்ஸ் திறக்கப்பட்டதன் மூலம், காஷ்மீர் மக்களுக்கு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பெரிய திரையில் திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். மல்டிப்ளெக்ஸில் ஒரே நேரத்தில் 500 க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய வகையில் மூன்று பெரிய ஆடிட்டோரியங்கள் கட்டப்பட்டுள்ளன என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பார்வையாளர்களுக்கு சிறந்த திரைப்பட அனுபவத்திற்காக சரவுண்ட் ஒலியை வழங்கும் டால்பி அட்மாஸ் டிஜிட்டல் ஒலி அமைப்புடன் ஆடிட்டோரியம் வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரி கைவினைப் பொருட்களான ‘கதம்பண்ட்’ மற்றும் ‘பேப்பியர் மச்சே’ ஆகியவை சினிமா ஹாலில் பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பாக உள்ளது.

முன்னதாக, தெற்கு காஷ்மீரின் புல்வாமா, ஷோபியான் ஆகிய மாவட்டங்களில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 1980ம் ஆண்டு வரை திரையரங்குகள் செயல்பட்டு வந்தன. பின்னா், திரையரங்க உரிமையாளா்களை பயங்கரவாத குழுக்கள் அச்சுறுத்திய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அவை மூடப்பட்டன. அதன் பின்னர், 1990ம் ஆண்டுகளில் திரையரங்குகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், 1990-ல் பயங்கரவாதம் அதிகரித்ததால் பள்ளத்தாக்கில் திரையரங்குகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

காஷ்மீர் மக்கள் பல ஆண்டுகளாக, திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை கண்டு களிக்க முடியாத நிலை நீடித்தது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீரில் மல்டிபிளக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.