வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் சாமான்யன். கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அச்சுராஜாமணி இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார்.. சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார். இந்தப்படத்தின் பாடல்களை சினேகன் மற்றும் விஜேபி ஆகியோர் எழுத. இவர்களுடன் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் முதன்முறையாக இந்த படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார்.
இந்த படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட படக்குழுவினருடன் மலேசிய முன்னாள் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் குலசேகரன், இயக்குனர் சந்தானபாரதி, கவிஞர் சினேகன், கும்கி-2 பட கதாநாயகி ஷ்ரத்தா ராவ், பாக்ஸர் பட கதாநாயகி ஆர்யா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் ராமராஜன் பேசும்போது, “என்னுடைய கரகாட்டக்காரன் படம் இதே கிருஷ்ணவேணி தியேட்டரில் அன்று 300 நாட்கள் ஓடியது. இன்று அதே தியேட்டரில் என்னுடைய படத்தின் விழா நடப்பது சந்தோஷமாக இருக்கிறது. அதுமட்டுமா என்னுடைய பட விழா ஒன்றில் இத்தனை மைக், இத்தனை கேமராக்களை நான் பார்ப்பது இதுதான் முதல்முறை.
நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்பது போல இப்போது மீண்டும் ஹீரோவாகவே திரும்பி வந்துள்ளேன். இந்த படத்தில் நான் ஹீரோ என்பதைவிட கதையும் திரைக்கதையும் தான் ஹீரோ என்று சொல்லலாம். இந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு ராமராஜன் துப்பாக்கி புடிச்சு என்ன பண்ணப்போறார் என்றுதான் பலரும் கேட்பார்கள் அதற்கான விடை இந்த படத்தில் இருக்கிறது.
இத்தனை வருடங்களில் எத்தனையோ கதைகள் கேட்டேன். சரியாக அமையவில்லை. ஆனால் எவ்வளவு கோடி கொடுத்தாலும் தரம் கெட்டுப்போய் மோசமான படங்களில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் நான் பின்தொடர்வது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாதையை. அதனால்தான் தம் அடிக்கவும் தண்ணி அடிக்கவும் எனக்கு பிடிக்காது.
இந்த 45 வருடங்களில் 45 படங்களில் நடித்துவிட்டேன் சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போதுவரை நான் தாடி வைத்ததே இல்லை இந்த படத்திற்காக முதன்முறையாக தாடி வைத்து நடிக்கிறேன். இந்தப்படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் கூறியபோது அவர் சொன்ன இன்டர்வல் காட்சியை கேட்டு திகைத்துவிட்டேன். இதுவரை தமிழ் சினிமாவிலேயே வந்திராத அப்படி ஒரு இன்டர்வெல். அதுமட்டுமல்ல இந்த படத்தின் டைட்டில் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது. ஒரு படத்தின் டைட்டில் என்பது படத்திற்கு உயிர் போன்றது. படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும்போது கூட அதற்கென தனியாக ஒரு டைட்டில் வைக்க வேண்டும். முதல் குழந்தை பிறந்தபோது நாள் நேரமெல்லாம் கணித்து அலசி ஆராய்ந்து கண்ணன் என பெயர் வைத்துவிட்டு இரண்டாவது குழந்தை பிறக்கும்போது கண்ணன்-2 என யாராவது பெயர் வைக்கிறார்களா..? என்னிடம் கூட ஒரு சிலர் கரகாட்டக்காரன் 2 எடுக்கலாமா என கேட்டபோது அப்படியே அவர்களை ஆஃப் பண்ணிவிட்டேன். இயக்குனர் விஜய் மில்டன் கோடீஸ்வரன்-2வில் நடிக்கிறீர்களா என கேட்டு வந்தபோது மறுத்துவிட்டேன்
50 படம் நடித்துவிட்டு அதன்பிறகு டைரக்சன் பக்கம் போய்விடலாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால் சூழ்நிலை அப்படியே மாறிவிட்டது. இப்போது 45 படம்.. இது போதும் எனக்கு.. முதல்முறையாக எனது படம் 5 மொழிகளில் வெளியாகிறது என்பதை இப்போது நினைத்தாலும் இது கனவா இல்லை நனவா என்று தான் நினைக்க தோன்றுகிறது. இந்தப்படத்தின் இயக்குநர் ராகேஷை பார்க்கும்போது என்னை முதன்முதலாக நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் விஅழகப்பன் போன்றே எனக்கு தோன்றுகிறார். இந்த நேரத்தில் எனக்கு இப்படி ஒரு படத்தை கொண்டு வந்ததற்காக தயாரிப்பாளர் மதியழகன் அவர்களுக்கும் இயக்குநர் ராகேஷுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.