சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா, மனுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வர்ண பேதங்களை விமர்சித்துப் பேசியிருந்தார். அதையடுத்து, “ஆ.ராசா இந்து மக்களின் மனதை புண்படுத்திவிட்டார்” என்று கூறிய பா.ஜ.க-வினரும், இந்து முன்னணியினரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், எம்.எல்.ஏ-வுமான வேல்முருகனும் ஆ.ராசாவின் கருத்தை ஆதரித்ததுடன் பா.ஜ.க, இந்து முன்னணியினரின் போக்குகளையும் கண்டித்திருக்கின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று போராட்ட அறிவிப்பு வெளியிட்டிருந்தது பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம். அத்துடன் போராட்டம் நடைபெறும் இடத்தையும் குறிப்பிட்டிருந்தது. அதன்படி இன்று காலையில் ராஜா தியேட்டர் சந்திப்பில் கூடிய பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தினர், மனுதர்ம சாஸ்திரம் குறித்தும், அதில் வர்ண பேதங்கள் அடிப்படையில் மக்களை பிரித்து வைத்திருப்பது குறித்தும் விமர்சித்துப் பேசினர்.
மேலும், மனுதர்ம சாஸ்திரத்துக்கு எதிரான கருத்துகளை சொல்லி, அதன் நகல்களை கிழித்துப் போட்டனர். அதையடுத்து காவல்துறையினர் அவர்களை கைதுசெய்து காவல்துறை வாகனத்தில் ஏற்ற ஆரம்பித்தனர். அப்போது அங்கு வந்த பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர், ’ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறியபடியே, பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தினரிடமிருந்து மனுதர்ம சாஸ்திர நகலை பிடுங்க முயன்றனர்.
அதையடுத்து அவர்களை ஆபாசமான வார்த்தைகளால் பேசத் தொடங்கினர். அதன்பிறகு சாலையில் கிடந்த கற்களையும், காலில் அணிந்திருந்த செருப்புகளையும் அவர்கள்மீது வீசினார்கள். பதிலுக்கு அந்த கற்களை எடுத்து இந்து முன்னணியினர்மீது வீசினார்கள் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தினர். அதனால் அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. இந்தச் சம்பவத்தில் ஒரு காவலருக்கும், இந்து முன்னணி நிர்வாகிக்கும் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.