தமிழ் சினிமாவின் கிராமத்து ராஜன் எம்ஜிஆர் பாணியை பின்பற்றி நடித்த ராமராஜன் நீண்ட ஆண்டுகளுக்கு பின் நடிக்க வந்துள்ளார்.
இரண்டாவது இன்னிங்க்சில் சற்று வித்தியாசமாக தாடி வைத்தும், துப்பாக்கி தூக்கியும் நடித்துள்ளாராம்.
ராமராஜனின் சிறப்பான படமான கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க அணுகியபோது தான் மறுத்துவிட்டதாக அதற்கான காரணத்தையும் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
ராமராஜன் கிராமத்து ராஜன். இன்றும் கிராமத்து பெண்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள நாயகன், உலக நாயகர்கள் எல்லாம் வன்முறை நோக்கி நகரும்போது எந்த வித சமரசத்துக்கும் இடம் கொடுக்காததால் ஓரங்கட்டப்பட்டு ஒதுங்கியிருந்த ராமராஜன் தற்போது சாமானியன் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதற்கான விழா நடந்த போது விழாவில் பேசிய ராதாரவி,”கமல், ரஜினிக்கு போட்டியாக இருந்தவர் ராமராஜன். மீண்டும் இரண்டாவது அவதாரம் எடுத்துள்ளார் நிச்சயம் வெல்வார் என வாழ்த்தினார்.
மீண்டும் ஹீரோவாக துப்பாக்கியுடன், ஏன்?-ராமராஜன்
விழாவில் ராமராஜன் பேசியதாவது, “மீண்டும் ஹீரோவாகவே திரும்பி வந்துள்ளேன். இந்த படத்தில் நான் ஹீரோ என்பதைவிட கதையும் திரைக்கதையும் தான் ஹீரோ என்று சொல்லலாம். இந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு ராமராஜன் துப்பாக்கி புடிச்சு என்ன பண்ணப்போறார் என்றுதான் பலரும் கேட்பார்கள் அதற்கான விடை இந்த படத்தில் இருக்கிறது.
கோடி ரூபாய் கொடுத்தாலும் மோசமான படங்களில் நடிக்க மாட்டேன்
இத்தனை வருடங்களில் எத்தனையோ கதைகள் கேட்டேன். சரியாக அமையவில்லை. ஆனால் எவ்வளவு கோடி கொடுத்தாலும் தரம் கெட்டுப்போய் மோசமான படங்களில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் நான் பின்தொடர்வது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாதையை. அதனால்தான் தம் அடிக்கவும் தண்ணி அடிக்கவும் எனக்கு பிடிக்காது.
சாமானியன் டைட்டில் என்னை கவர்ந்துவிட்டது
இந்த 45 வருடங்களில் 45 படங்களில் நடித்துவிட்டேன் சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போதுவரை நான் தாடி வைத்ததே இல்லை இந்த படத்திற்காக முதன்முறையாக தாடி வைத்து நடிக்கிறேன். இந்தப்படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் கூறியபோது அவர் சொன்ன இன்டர்வல் காட்சியை கேட்டு திகைத்துவிட்டேன். இதுவரை தமிழ் சினிமாவிலேயே வந்திராத அப்படி ஒரு இன்டர்வெல். அதுமட்டுமல்ல இந்த படத்தின் டைட்டில் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது. ஒரு படத்தின் டைட்டில் என்பது படத்திற்கு உயிர் போன்றது.
கரகாட்டக்காரன் -2 நடிக்க ஏன் ஒப்புக்கொள்ளவில்லை
படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும்போது கூட அதற்கென தனியாக ஒரு டைட்டில் வைக்க வேண்டும். முதல் குழந்தை பிறந்தபோது நாள் நேரமெல்லாம் கணித்து அலசி ஆராய்ந்து கண்ணன் என பெயர் வைத்துவிட்டு இரண்டாவது குழந்தை பிறக்கும்போது கண்ணன்-2 என யாராவது பெயர் வைக்கிறார்களா..? என்னிடம் கூட ஒரு சிலர் கரகாட்டக்காரன் 2 எடுக்கலாமா என கேட்டபோது அப்படியே அவர்களை ஆஃப் பண்ணிவிட்டேன். இயக்குனர் விஜய் மில்டன் கோடீஸ்வரன்-2வில் நடிக்கிறீர்களா என கேட்டு வந்தபோது மறுத்துவிட்டேன்.
5 மொழிகளில் முதன் முறையாக வெளியாகும் ராமராஜன் படம்
50 படம் நடித்துவிட்டு அதன்பிறகு டைரக்சன் பக்கம் போய்விடலாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால் சூழ்நிலை அப்படியே மாறிவிட்டது. இப்போது 45 படம்.. இது போதும் எனக்கு.. முதல்முறையாக எனது படம் 5 மொழிகளில் வெளியாகிறது என்பதை இப்போது நினைத்தாலும் இது கனவா இல்லை நனவா என்று தான் நினைக்க தோன்றுகிறது. இந்தப்படத்தின் இயக்குநர் ராகேஷை பார்க்கும்போது என்னை முதன்முதலாக நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் வி.அழகப்பன் போன்றே எனக்கு தோன்றுகிறார். இந்த நேரத்தில் எனக்கு இப்படி ஒரு படத்தை கொண்டு வந்ததற்காக தயாரிப்பாளர் மதியழகன் அவர்களுக்கும் இயக்குநர் ராகேஷுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.