எடப்பாடி பழனிச்சாமி சாதிய வெறியோடு நடந்து கொள்கிறார்: சாடும் கோவை செல்வராஜ்

சாதி அடிப்படையில் செங்கோட்டையன் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளிக்க வேண்டும் என கோவை செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகமும் ஜெயக்குமாரும் அரசியல் தலைவர்கள் அல்ல சர்க்கஸ் கோமாளிகள் என கோவை செல்வராஜ் காட்டமாக விமர்சித்துள்ளார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஒ பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய கோவை செல்வராஜ், நேற்றைய தினம் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தானும் எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே சாதி, எங்கள் சாதியை சேர்ந்தவர்கள் தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வர முடியும் என கூறியதாக குறிப்பிட்டு, அதிமுகவில் மூத்த தலைவராக இருப்பவர் சாதி அடிப்படையில் பேசி இருப்பது வெட்கக்கேடானது என விமர்சித்தார்.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சாதியைப் பார்த்து வாய்ப்பு அளிக்க மாட்டார்கள் விசுவாசத்தை பார்த்துதான் வாய்ப்பு அளிப்பார்கள் என கூறிய கோவை செல்வராஜ், சாதி வெறியை அடக்கியவர், ஒடுக்கியவர் எம் ஜி ஆர். அப்படிப்பட்ட புனிதமான இந்த அதிமுகவில் செங்கோட்டையன் சாதி வெறியோடு நடந்துகொண்டது காண்டிக்கதக்கது, வருத்தத்திற்குரியது என்றார்.

‘அதிமுக வரலாற்றில் சாதியே இருந்தது கிடையாது. சாதியை குறித்து ஜெயலலிதாவும் பேசியது கிடையாது. அனைத்து சாதி மக்களுக்கும் அவர் வாய்ப்பளிப்பார். எனவே செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலக வேண்டும். இல்லையென்றால் வரும் தேர்தல் தான் அவருக்கு கடைசி தேர்தலாக இருக்கும்’ என தெரிவித்தார்.

‘எடப்பாடி பழனிச்சாமி சாதிய வெறியோடு நடந்து கொள்கிறார், அதன் வெளிப்பாடு தான் செங்கோட்டையன் பேச்சு’ என விமர்சித்தார். சாதிய அடிப்படையில் செங்கோட்டையன் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோவை செல்வராஜ் வலியுறுத்தினார். எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பெங்களூரில் எடியூரப்பாவிற்கு பணம் கொடுத்து லோக் ஆயுக்தாவில் எடப்பாடி பழனிச்சாமி உறவினர்கள் மாட்டிக் கொண்டு சிறைக்கு செல்ல உள்ளதாகவும், அதனால், குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்க எடப்பாடி பழனிச்சாமி டெல்லி  சென்று இருப்பதாகும் சொல்லப்படுவதாக அவர் கூறினார்.

‘மேலும், பண்ருட்டி ராமச்சந்திரன் குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கும் அவருடன் உள்ளவர்களுக்கும் தகுதியில்லை, யோக்யதை இல்லை என காட்டமாக கூறினார்.

 சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு பதவி வாங்கி தரவில்லை என்றால், அவர் எங்கு இருப்பார். சாலையில் சுற்றி கொண்டிருப்பார்’ என விமர்சித்தார். ‘அதிமுக அலுவலக வழக்கு குறித்து சீ.வி சண்முகம் பேசியதற்கு பதில் அளித்த கோவை செல்வராஜ், அதிமுக அலுவலகம் தங்கள் வீடு, அது தங்கள் அலுவலகம் எனவும் சி.வி சண்முகம் காலை ஒன்று பேசுவார் மாலையில் ஓன்று பேசுவார். நன்றாக இருக்கும்போது ஒருமாதிரி பேசுவார், வேறு ஒரு நிலைக்கு சென்றுவிட்டால் பேசுவார். அவரெல்லாம் அதிமுகவில் தலைவர் அல்ல என விமர்சித்தார்.

 சீ.வி.சண்முகமும், ஜெயக்குமாரும் அரசியல் தலைவர்கள் அல்ல சர்க்கஸ் கோமாளிகள்’ என கோவை செல்வராஜ் காட்டமாக விமர்சித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.