இந்தியாவில் வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிவிங்கி புலிகள் இனம் அழிந்து விட்டது. சிவிங்கி புலிகள் இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952ஆம் ஆண்டு அரசு அறிவித்தது. 1948ஆம் ஆண்டில் இந்தியாவின் கடைசி சிவிங்கி புலி இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவிங்கி புலிகள் இனத்தை பெருக்கும் நோக்கில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் கடந்த ஜூலை 20ஆம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, நமீபியா அரசு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என எட்டு சிவிங்கிகளை இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
அதன்படி, தனி விமானத்தில் இந்தியாவுக்கு வந்த ஆப்பிரிக்க சிவிங்கி புலிகளை மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவில் தனது பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடி திறந்துவிட்டுள்ளார்.
சிவிங்கிப் புலிகள் திட்டம் தவறானது
சிவிங்கிப் புலிகள் மற்றும் அவற்றின் இயற்கையான வாழ்விடத்தை உருவாக்கும் புல்வெளிகளுக்கான பாதுகாப்பு திட்டம் என்று மத்திய அரசு இத்திட்டம் குறித்து புளகாங்கிதம் அடைகிறது. ஆனால், காட்டில், சுதந்திரமாக சுற்றித் திரியும் ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளுக்கு ஏற்ற வாழ்விடம், இரை இனங்கள் இந்தியாவில் இல்லை வல்லுநர்கள் கூறுகின்றனர். சிவிங்கிப் புலிகளுக்கு பதிலாக கேரகல்ஸ் மற்றும் கிரேட் இந்தியன் பஸ்டர்ட் போன்ற பிற அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான செயல்திட்டத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்திருக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியாவில் காணப்பட்ட ஆசிய சிவிங்கி புலிகள் வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக அழிந்து விட்டதாக 1952 இல் அறிவிக்கப்பட்டது. இந்திய காடுகளில் கடைசி சிவிங்கிப் புலிகள் இனம் 1948ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 1948 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டத்தில் உள்ள சால் காடுகளில் மூன்று சிவிங்கிப் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. அதேசமயம், மத்திய மற்றும் தக்காண பீடபூமியில் 1970களில் இவை காணப்பட்டதாக சில உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் 2021ஆம் ஆண்டில் ரெட் லிஸ்டில் பாதிப்புக்குள்ளாகும் விலங்கு என சிவிங்கிப் புலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. உலகம் முழுவதுமே மொத்தமாக 6,517 சிவிங்கிப் புலிகளே உள்ளன. போட்ஸ்வானா, சாட், எத்தியோப்பியா, ஈரான், கென்யா, நமீபியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் இவை உள்ளன. ஆசிய கண்டத்தை பொறுத்தவரை சிவிங்கிப் புலிகள் இப்போது ஈரானில் மட்டுமே உள்ளன. ஆசிய சிவிங்கிப் புலிகள் என அழைக்கப்படும் இவை, அவற்றின் துணை இணங்கள் ஆகும். அதாவது, ஆசிய சிவிங்கி புலிகளின் துணை இனங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் ஈரானில் மட்டுமே தற்போது எஞ்சியிருக்கிறது. சுமர் 50 சிவிங்கிப் புலிகள் அங்கு காணப்படுவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஈரானில் மிகவும் குறைவான ஆசிய சிவிங்கிப் புலிகளே உயிர்வாழ்கின்றன என்பதை கருத்தில் கொண்டு, அவற்றை இந்தியாவுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்படவில்லை. எனவே, அதற்குப் பதிலாக ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளை கண்டம் விட்டு கண்டம் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 8 சிவிங்கிப் புலிகள் இந்திய காட்டில் விடப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான விவாதங்கள் 2009 ஆம் ஆண்டு இந்திய வனவிலங்கு அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தனர். இதற்கு முன்னால் சிவிங்கிப் புலிகள் வாழ்ந்ததன் அடிப்படையில் குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மத்திய இந்திய மாநிலங்களின் 10 இடங்களில் இறுதியாக மத்தியப் பிரதேசத்தின் குணோ தேசிய பூங்கா தேர்வு செய்யப்பட்டது. அங்கு சிவிங்கிப் புலிகளுக்கான பொருத்தமான வாழ்விடம் மற்றும் போதுமான இரை தளம் இருக்கும் என கருதப்படுகிறது.
கொல்லப்படும் மான்கள்
குணோ தேசிய பூங்காவில் புதிய சூழலுக்கு ஏற்ப சிவிங்கிப் புலிகள் மாறுவதை நிபுணர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சிவிங்கி புலிகளுக்கு இரையளிக்கும் பொருட்டு குணோ தேசிய பூங்காவில் மான்கள் விடப்படுவதாகவும், பிரதமர் மோடி உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் பிஷ்னாய் சமூகம் வலியுறுத்தியுள்ளது. மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாக்கும் சமூகமாக இச்சமூகத்தினர் அறியப்படுகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
“ராஜஸ்தானில் அழியும் தருவாயில் உள்ள மான் இனங்கள் மற்றும் பிஷ்னோய் சமூகத்தின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தை மத்திய அரசு விசாரிக்க வேண்டும். இந்த தகவல் உண்மை என கண்டறியப்பட்டால், உடனடியாக அதனை நிறுத்த வேண்டும்.” என பாஜக தலைவர் குல்தீப் பிஷ்னாய் தெரிவித்துள்ளார்.
அனைத்து விதமான ஆபத்து மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து மான்கள் இனத்தை பாதுகாக்க கடினமாக உழைத்து வரும் நிலையில், இதுபோன்ற செயல்கள் வேதனை அளிப்பதாக அகில் பாரதிய பிஷ்னோய் மகாசபா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. நீண்ட காலமாக அழிந்து வரும் சிவிங்கிப் புலிகளை அரசாங்கம் இந்தியாவிற்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால் அழிந்து வரும் இந்திய வனவிலங்கு இனங்கள் குறித்து கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன் எனவும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
குணோ தேசிய பூங்கா கிட்டத்தட்ட 21 சிவிங்கிப் புலிகளை ஏற்கும் திறன் படைத்தது. பூங்காவிற்குள் இருந்து கிராமங்களை முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட நாட்டிலுள்ள ஒரே வனவிலங்கு தளம் குணோ மட்டுமே. இந்தியாவின் நான்கு பெரிய பூனை இணங்களான , சிங்கம், சிறுத்தை மற்றும் சிவிங்கிப் புலிகளுக்கான வாழ்விடத்தை வழங்குகிறது.
சிவிங்கிப் புலிகள் செயல் திட்டம்
2013ஆம் ஆண்டு இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது. ஆசிய சிங்கங்களை குஜராத்தில் இருந்து குணோவுக்கு இடம் மாற்றுவது தொடர்பான வழக்கில், ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்குள் கொண்டு வரும் வனம் மற்றும் காலநிலைமாற்ற அமைச்சகத்தின் திட்டத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. வெளிநாட்டு சிவிங்கிப் புலிகள் இணத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு விரிவான அறிவியல் ஆய்வு செய்யப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.
ஜனவரி 2020 இல், இந்தியாவில் சிவிங்கிப் புலிகளை கொண்டு வரக்கோரி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வழக்கு விசாரணையின் போது, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்விடங்களில் ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையேற்று உச்ச நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியது. அதேசமயம், ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளை பெரிய அளவில் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து முடிவு செய்ய ஒரு நிபுணர் குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்தது.
அதன்படி, 2021 இல் இந்திய அரசாங்கம் சிவிங்கிப் புலிகள் செயல் திட்டத்தை வெளியிட்டது. சுதந்திரத்தின் 75 ஆண்டை குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அவை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறிது தாமதத்திற்கு பிறகு கடந்த 17ஆம் தேதி அவை குணோ தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ளன. கண்டம் விட்டு கண்டம் சிவிங்கிப் புலிகளை இடமாற்றம் செய்வது நமீபியாவிற்கு முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. அதேபோல், ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகள் உலகின் மற்ற பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவதும் இதுவே முதல்முறையாகும்.
உயிர் வாழ்வது கடினம்
இந்தியாவில் உள்ள காடுகளில் ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகள் வாழுமா என்பது உறுதியாக தெரியவில்லை என மூத்த வனவிலங்கு பாதுகாவலரும், வனவிலங்குகள் பற்றி சுமார் 40 புத்தகங்களை எழுதியவருமான வால்மிக் தப்பார் தெரிவித்துள்ளார். காட்டில், சுதந்திரமாக சுற்றித் திரியும் ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளுக்கு ஏற்ற வாழ்விடம், இரை இனங்கள் இந்தியாவில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
“காடுகளில் சிவிங்கிப் புலிகள் பற்றிய அனுபவமோ புரிதலோ அதிகாரிகளுக்கு இல்லை. ஆப்பிரிக்க சிறுத்தைகள் குணோ பூங்காவில் விடுவிக்கப்பட்டால் அவை குறுகிய காலத்தில் மட்டுமே உயிர்வாழும். இந்தியா ஒருபோதும் ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளின் இயற்கையான தாயகமாக இருக்காது. நமது சொந்த பூர்வீக இனங்களை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நம்புகிறேன். வெளிநாட்டு இனங்களுக்கு பணத்தையோ, மனிவளத்தையோ செலவிட வேண்டாம்.” என அவர் தெரிவித்துள்ளார்.
குணோ பூங்காவிற்கு ஆசிய சிங்கங்களை இடமாற்றம் செய்ய ஆதரவு தெரிவிக்கும் வாதிடும் வனவிலங்கு உயிரியலாளரும் வனவிலங்கு பாதுகாப்பு விஞ்ஞானியுமான ரவி செல்லம், சிவிங்கிப் புலிகள் அறிமுக திட்டம் ஆசிய சிங்கங்களை குஜாராத்திலிருந்து வெளியேற்றுவதை தடுக்கும் முயற்சி என்கிறார். தர்க்க ரீதியாகவோ, அறிவியல் ரீதியாகவோ பாதுகாப்புக்கான திட்டம் இதில் இல்லை என தெரிவிக்கும் அவர், உச்ச நீதிமன்ற உத்தரவு தெளிவாக இருக்கும்போதும், ஆசிய சிங்கங்களை குஜாராத்தில் வைக்கவே மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது எனவும் குற்றம் சாட்டுகிறார்.