கெடுதலை மட்டுமே செய்யும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்! முழுமையாக ஒழிக்க கோரிக்கை!

தடை செய்யப்பட்ட, இரக்க குணமற்ற ஆப்ரிக்க கெளுத்தி மீன் பண்ணைகளை முற்றிலும் அழிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரணம் என்ன? இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள்.. கோழி, மாடு, ஆடு இறைச்சி கழிவுகளே இவற்றிற்கு உணவாக வழங்கப்படுகிறது. இரும்பு போன்றவற்றையும் உண்கின்றன. எதுவும் கிடைக்காத பட்சத்தில் மீன்களையே உண்ணும் குணம் கொண்டவை. ஆக்சிஜன் குறைந்த அளவுகொண்ட இடங்கள், கழிவுநீர், சேறு, சகதி நிறைந்த இடங்களிலும் வளரக்கூடியவை. வெள்ளப்பெருக்கு காலங்களில், வெள்ளத்தில் கலந்து ஏரிகளில் நுழைந்தால், நமது பாரம்பரிய மீன் வகைகளை அழித்துவிடும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது.
image

இப்படி இயல்பு தன்மைக்கு எதிராகவும், மாமிசத்தை உட்கொண்டு வளரக்கூடியவை என்பதோடு மீன்கள் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், இவற்றை வளர்க்கவும், விற்பனை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது. ஆப்ரிக்க கெளுத்தி மீன் ஒரு கிலோ ரூபாய் 65 என குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால், மக்கள் ஆபத்தை உணராமல் வாங்கிச் செல்வது தெரியவருகிறது. மேலும் மாமிச கழிவுகளை சாப்பிட்டு வளரும் மீன்களை, ஏரியில் வளரும் மீன்கள் எனக் கூறி, உயிருடன் வைத்து, கிராமங்களில் பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த வகை மீன்களை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்படுவதால், மக்கள் யாரும் வாங்கவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்து வருகிறது.
image
ஆனால், தருமபுரி மாவட்டத்தில் மதிகோன்பாளையம், பாலக்கோடு, காரிமங்கலம் உள்பட பல இடங்களில் 50க்கும் மேற்பட்ட ஆப்ரிக்க கெளுத்தி மீன் பண்ணைகள் செயல்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். லாரிகள் முலம் கர்நாடகம், ஆந்திரா, கேரளா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் இவை அனுப்பப்பட்டு வருகின்றன.
image
தருமபுரியின் மதிகோன்பாளையத்தில் செயல்பட்ட மூன்று ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள் பண்ணையை மீன்வளத்துறை, வருவாய் துறையினர் அழித்தனர். ஆனால் மாவட்டத்தின் பல இடங்களில் செயல்படுவதால் பண்ணைகளை முற்றிலும் அழிக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.