ஜூஹூ கடற்கரை அருகே மத்திய அமைச்சர் நாராயண் ரானே, விதிகளுக்கு மாறாக கட்டிய பங்களாவை இடிக்க உத்தரவிட்ட மும்பை உயர் நீதிமன்றம், அவருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மத்திய சிறு குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சராக உள்ள நாராயண் ரானேவுக்கு, ஜூஹூ கடற்கரையில் பங்களா உள்ளது. அதில், மும்பை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி இன்றி கட்டடங்கள் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது.
அந்த பங்களாவை ஒழுங்குபடுத்தக் கோரி, மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டது. அதனை மாநகராட்சி நிராகரித்து விட்டது. இதனை அடுத்து இரண்டாவது முறையாக மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தனுகா மற்றும் கமல் கட்டா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு சொந்தமான நிறுவனம் அளித்த மனுவை பரிசீலனை செய்ய மாநகராட்சியை அனுமதிக்க முடியாது. இது, அங்குள்ள ஒட்டுமொத்த விதிமீறல் கட்டுமானத்தையும் அங்கீகரிக்க வழி ஏற்படுத்தி விடும்.
விதிமீறி கட்டப்பட்ட பங்களாவை இரண்டு வாரங்களுக்குள் இடித்து விட்டு, அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நாராயண் ரானேவுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை, மகாராஷ்டிர மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மத்திய அமைச்சர் நாராயண் ரானே சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், 6 வாரங்களுக்கு உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.