சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) மூன்றாவது முழுமை திட்டத்தின்படி (3rd master plan), அரக்கோணம், அச்சரபாக்கம் போன்ற பகுதிகள் வரையிலும் சென்னை மாநகராட்சியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி இதுவரை இரண்டு முறை விரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, 1975-ஆம் ஆண்டுக்கு முன்பு 174 சதுர கி.மீட்டராக இருந்த சென்னை, தற்போது 1,189 சதுர கி.மீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சியின் போது 1,189 சதுர கி.மீட்டராக இருந்த சென்னை மாநகராட்சியை 8,878 சதுர கி.மீட்டராக விரிவுபடுத்தும் திட்டம் குறித்த ஆலோசனைகள் நடந்தன. தற்போது மீண்டும் சென்னையை விரிவுபடுத்துவது குறித்து தி.மு.க அரசின் தலைமையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக 2027 முதல் 2046 வரையிலான, 20 ஆண்டுகளுக்கு சென்னை பெருநகர விரிவாக்கத்துக்கான 3-வது முழுமை திட்டம் தயாரிக்கப்படுகிறது. அடிப்படை பணிகளில் இருந்தே, மக்களின் கருத்துகளை உள்ளடக்கிய வகையில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மூன்றாவது முழுமை திட்ட தொலைநோக்கு திட்ட ஆவணங்களில் என்னென்ன விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பது குறித்து, மக்கள் கருத்து தெரிவிக்க http://cmavision.in என்கிற தனி இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
அதில் மக்கள் தங்கள் கருத்துகளை முழுமையாக பதிவிடலாம்.
வளரும் நாடுகளில் உள்ள நகரங்கள் விரிவடைவது 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே வழக்கமான ஓர் அம்சமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நகரமயமாக்கல் என்பது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயமாக மாறிவிட்டது.
ஒரு நகரம் விரிவடையும்போது, மக்கள் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வதால், தொழில் திறன் கொண்டவர்களின் எண்ணிக்கை நகரங்களில் அதிகரிக்கிறது. பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை நகர விரிவாக்கம் ஊக்குவிக்கிறது. அதுமட்டுமில்லாமல் தொழில்நுட்ப தொழில்களின் வளர்ச்சியும் நகர விரிவாக்கத்தின் போது நடக்கின்றன.
இதன் காரணமாக அந்த நகரத்தின் பொருளாதாரம் மேம்படுகிறது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிறது. மக்களின் வாழ்க்கை தரம் உயர்கிறது என்கிற பல காரணிகள் சொல்லப்பட்டாலும், ஒரு நகரம் விரிவடையும்போது குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்து உட்பட நகர்ப்புற உள்கட்டமைப்பில் அரசு மெத்தனமாக இருக்கிறது என்பதைத்தான் நாம் இன்றளவும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
ஏனெனில் இன்றைய சென்னையின் நகர உள்கட்டமைப்பில் ஏகப்பட்ட குழறுபடிகள் உள்ளது. விடாது ஒருநாள் மழை பெய்தாலும், அந்த மழை வெள்ளத்தில் சென்னையின் சாலைகளும், குடியிருப்பு பகுதிகளும் மிதக்கின்றன. ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களால் மக்கள் பல தொந்தரவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் சாலை கட்டமைப்புகளில் இருக்கும் சிக்கல்களால் போக்குவரத்து நெரிசல் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், சென்னையில் மரங்களின் அடர்த்தி குறைந்துகொண்டே வருவதால் வெயில் காலத்தின் அதீத வெப்பம், வாகனப் புகையால் உண்டாகும் மாசு என்று பல நெருக்கடிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் சென்னை நகரக் கட்டமைப்பு உள்ளது.
ஒரு நகரத்தை விரிவுபடுத்தும்போது, அதில் வாழும் எளிய உழைக்கும் மக்களுக்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதை தாண்டி, சிக்கல்கள் என்ன உருவாகும், அதை எப்படி சரி செய்வது என்பதை அரசு கட்டாயம் கவனிக்க வேண்டும்.
ஐ.டி துறையினால் ஓ.எம்.ஆர் சாலை தற்போது அசுர வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் உரத் தொழிற்சாலை, கனரக வாகன உற்பத்தி, உதிரி பாகங்கள் தயாரிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என பொருளாதார மையமாக இருந்துவரும் வடசென்னையின் திருவொற்றியூர், எண்ணூர், மணலி, அம்பத்தூர் போன்ற பகுதிகளுக்கு இன்று வரை உள்ளகட்டமைப்பு வசதிகள் வளர்ந்த பாடில்லை. மெட்ரோ வந்த பிறகும் கூட சாலை கட்டமைப்பு வசதிகள், வடிகால் வசதிகள் இன்னமும் மேம்படவில்லை.
ஆனால், இந்த 3-வது முழுமை திட்டத்தின்படி நகர விரிவாக்கம் நடைபெறும் போது இணைக்கப்பட உள்ள கிராமப்புற பகுதிளில் வாழும் மக்களுக்கு என்ன மாற்று வழங்குவது, ஏற்கெனவே இருக்கக்கூடிய விவசாயப் பகுதிகளுக்கு என்ன மாற்று, அந்த நிலங்களில் பணியாற்றக் கூடிய நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு என்ன மாற்று என்பதையெல்லாம் அரசு முன்கூட்டியே யோசிக்க வேண்டும்.
நகர விரிவாக்கத்தில் வானுயர்ந்து நிற்கும் கட்டடங்கள் எப்படி முக்கியமோ, அதே போல வடிகால்களும், நீர்நிலைகளும், நெருக்கடியற்ற சாலை போக்குவரத்து கட்டமைப்புகளும், அங்கு வாழும் உழைக்கும் மக்களுக்கான மாற்றும் மிக மிக முக்கியம்.
இவை அனைத்தையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு 20 ஆண்டுகளில் 8,878 சதுர கி.மீட்டராக விரிவாக்கம் அடையப் போகும் சென்னையை உண்மையான சிங்காரச் சென்னையாக்க வேண்டும் என்பதுதான் மக்கள் அரசிடம் வைக்கும் மிகப்பெரிய கோரிக்கை.