திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடந்தது. இதனால் பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன்பு வரும் செவ்வாய்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். நிறைவாக அக்டோபர் 5ம்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடைபெறும்.இதையொட்டி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று காலை நடந்தது. அப்போது மூலவர் மீது பட்டு வஸ்திரத்தால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கல் மண்டபங்கள், தங்க கொடிமரம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் காலை 6 மணி முதல் 10 மணி வரை தண்ணீரால் சுத்தம் செய்து பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கட்டி கற்பூரம், மூலிகை திரவியங்கள் கொண்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
பின்னர் மூலவர் மீது சாத்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றி சிறப்பு பூஜைகள், நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருநத பக்தர்கள் தரிசனம் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டது. மேலும் விஐபி தரிசனமும் இன்று ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.