"இலங்கை மக்களுக்கு உதவப் போனேன், வருமான வரித்துறை கேள்வி கேட்கறாங்க!"- பிளாக்பாண்டி ஆதங்கம்

உதவி செய்யப் போய் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார் நடிகர் பிளாக் பாண்டி. சில வார‌ங்களுக்கு முன், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக நேரடியாக அங்கு சென்று சில உதவிகளைச் செய்து வந்த இவரை, காவல்துறை மற்றும் வருமான வரித்துறையினர் தற்போது கேள்வி மேல் கேள்வி கேட்டு விசாரித்துவருகிறார்களாம்.

விஜய் டி.வி-யில் ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்தவர் நடிகர் பிளாக் பாண்டி. தொடர்ந்து ‘அங்காடித் தெரு’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார். இவர் ‘உதவும் மனிதம்’ என்கிற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதன் மூலம் சில பொதுச் சேவைகளையும் செய்துவந்தார்.

சில நாள்களுக்கு முன் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்குத் தேவையான அரிசி பருப்பு மளிகைச் சாமானங்களுடன், சில குடும்பங்களுக்குப் பண உதவியும் செய்தது இவரது ‘உதவும் மனிதம்’ அமைப்பு.

இது தொடர்பாக‌ 21/9/22 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

பிளாக் பாண்டி

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழக‌ டிஜி.பி அலுவலகத்திலிருந்து இலங்கை செல்வதற்காகப் பாண்டிக்கு உதவிய, நெருக்கமான அந்த நண்பரை அழைத்தவர்கள், “நாடு விட்டு நாடு போய் செய்யற உதவிகளையெல்லாம் நேரடியாப் போய்ச் செய்ய வேண்டாம்ன்னு சொல்லிடுங்க, அது தேவையில்லாத சிக்கலை வரவழைக்கலாம்” எனச் சொன்னார்களாம்.

“இத்தனைக்கும் பாண்டி எல்லாவற்றையும் முறையாகவே செய்தார். இலங்கை மக்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டுமென தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதினார். தலைமைச் செயலாளர் அலுவலகத்திலிருந்து அந்தக் கடிதம் பொதுத் துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டது. அங்க போனா, ‘நீங்க மத்திய அரசுகிட்டதான் அனுமதி வாங்கணும்’ன்னு சொன்னாங்க.

மத்திய அரசுத் தரப்புல விசாரிச்சா, ‘இதுக்கு அனுமதியெல்லாம் தேவையில்லை; உங்க அமைப்பு மூலமா பண்ணிக்கோங்க’ன்னு சொல்லிட்டாங்க. இவ்ளோ முயற்சிகளுக்குப் பிறகு, இலங்கைத் தூதரகத்துக்கும் தெரிவித்துவிட்டுதான் உதவிகளைச் செய்துட்டு வந்தார்.

இப்ப என்னன்னா, ‘யாரைக் கேட்டுப் போய் வந்தீங்க’ன்னு போலீஸும், ‘இனிமே இந்த மாதிரியெல்லாம் நடக்காதுன்னு எழுதிக் கொடுங்க’ன்னு வருமான வரித்துறையும் சொல்றது அவரை ரொம்பவே வருத்தப்பட வச்சிடுச்சு” என்கின்றனர் பாண்டியின் நண்பர்கள்.

பாண்டியிடம் இது தொடர்பாக நாம் கேட்டதற்கு, “‘வருமான வரித்துறையிலிருந்து உங்க ட்ரஸ்டுக்குத் தரப்பட்ட 80 ஜி வருமான வரிச்சலுகையை ஏன் ரத்து செய்யக் கூடாது’ன்னு கேட்டாங்க. இது தொடர்பா வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருமான வரித்துறைக்கு உரிய விளக்கம் தரலாம்னு இருக்கேன். நான் செய்யப்போனது மனிதாபிமான அடிப்படயிலான உதவி. ஆனா நாடு விட்டு நாடு உதவிகளைச் செய்யறப்ப இவ்ளோ சட்டப் பிரச்னைகள் இருக்கும்னு எனக்குத் தெரியாது” என்கிறார்.

பிளாக் பாண்டி குடும்பத்தினர்

வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் சிலரிடம் பேசிய போது, “அறக்கட்டளை பதிவு செய்யறப்பவே, மக்கள்கிட்ட இருந்து பணம் வசூலிச்சா அதை எந்த நோக்கத்துக்காக‌ப் பயன்படுத்தப் போறோம்னு சொல்லணும். அந்த நோக்கத்துக்காக மட்டுமே பணத்தைச் செலவிடணும். அதை மீறினா வருமான வரிச் சலுகை தர்றதுல சிக்கல் வரும். அதேபோல நம்ம நாட்டுப் பணம் வெளிநாட்டுக்குப் போகுதுன்னா அந்த இடத்துலயும் சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கு, அதை நிச்சயம் கடைப்பிடிக்கணும்” என்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.